50% மானியத்தில் உயிர் உரங்கள் - பயன்படுத்தும் முறையை விளக்கிய வேளாண் உதவி இயக்குநர்


ஶ்ரீவில்லிபுத்தூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விரிவாக்க மையங்களில் அனைத்து வகையான உயிர் உரங்களும் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனலட்சுமி கூறியதாவது: "வேளாண்மையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்கள் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சுழற்சிக்குப் பெரும் ஆதாரமாக விளங்குகிறது. பொதுவாக வளிமண்டல தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் மண்ணில் கிடைக்காத நிலையில், மணி மற்றும் சாம்பல் சத்துக்களைக் கரைத்துப் பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாக்கள், பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகள் என உயிர் உரங்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகிறது.

இவற்றை விதை நேர்த்தியாகவும் அல்லது நடவு வயலில் மக்கியத் தொழு உரத்துடன் கலந்து இடுவதன் மூலமும் பயன் பெறலாம். ரைசோபியம், அசோஸ்பைரில்லம் அசட்டோபாக்டர் போன்றவை காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தவும், பாஸ்போ பேக்டீரியா மணிச்சத்தைக் கரைத்து அளிக்கவும், வேர் உட்பூசணம் போன்றவை மணிச்சத்து, துத்த நாகச் சத்து போன்றவற்றைப் பயிர் எடுத்துக்கொள்ள ஏதுவாக இடம் பெயரச் செய்யவும் உதவுகின்றன.

மேலும், செறிவூட்டப்பட்ட மக்கிய உரங்கள் தயாரிக்க பண்ணைக் கழிவுகள் அளவில் அதிகமாகவும், குறைந்த சத்துக்களையும் கொண்டு இருக்கும். ஆகையால் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் பண்ணைக் கழிவுகளை, கிளிரீசிடியா, அகத்தி போன்ற பசுந்தாள் இலைகள், மாட்டுச்சாணம் மற்றும் கோமியம், நுண்ணுயிர் கலவைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்கச் செய்து, பிறகு செறிவூட்டிப் பயன்படுத்தலாம்.

இதற்கு நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகளை அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பேக்டீரியா (0.2 சதவீதம்) மற்றும் ராக் பாஸ்பேட் 2 சதவீதம்), சாம்பல் (2 சதவீதம்) போன்ற உயிர் உரங்களை ஒரு டன் மக்கிய உரத்துடன் கலந்து, நிழலில் கடினமான தரையில் குவித்து, 40 சதவீதம் ஈரப்பதத்தில் 20 நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதனால் இதில் கலக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகபட்ச வளர்ச்சியை அடைவதோடு, அனைத்துச் சத்துக்களும் பயிர் எடுத்துக் கொள்ள ஏதுவான வகையில் மாற்றப்படும்.

மேலும், இவற்றில் உள்ள நொதிகள் மற்றும் அமிலங்கள் பயிரின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். மேலும், செறிவு மிக்க உரங்களான புண்ணாக்கு வகையான மக்கிய தொழு உரம் மற்றும் உயிர் உரங்களுடன் சேர்த்துச் செறிவூட்டப்பட்ட உரங்களாக மாற்றிப் பயன்படுத்தும்போது, கொழுப்புப் பொருட்களில் எண்ணெய் சிதைவுறுதலும் விரைவாக நடந்து, பயிருக்குக் கிடைக்கும் சத்துக்களும் அதிகரிக்கும்.

இரும்பு, மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் தாவர ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும். ஆனால் மேற்காணும் ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்கும்போது தேவையான அளவு நுண்ணூட்டச் சத்துகள் பயிர்களுக்குக் கிடைப்பதோடு கரிமப் பொருளின் அளவும் சீராக நிர்வகிக்கப்பட்டு இவற்றின் குறைபாடுகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் தவிர்க்கப்படும்.

எனவே உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி முறையில், ஒரு ஹெக்டேருக்குத் தேவையான விதைகளை 125 மில்லி லிட்டர் அளவுள்ள நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் துத்தநாக பாக்டீரியா ஆகியவற்றை அரிசி கஞ்சியுடன் கலந்து அனைத்து விதைகளிலும் பரவும் வண்ணம் விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நாற்று நனைத்தல் முறையில் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் உரங்களை தலா 400 மில்லி லிட்டரை (திரவ வடிவம்), வயலில் சிறு பாத்தி அமைத்து 40 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுகளின் வேர்ப் பகுதி நன்கு நனையும்படி 30 நிமிடம் நனைத்து பின்பு நடவு செய்ய வேண்டும்.

மண்ணில் இடுதல் முறையில், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களை தலா 500 மில்லி லிட்டர் (திரவ வடிவம்) மற்றும் 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து கடைசி உழவுக்கு முன்பு சீராக வயலில் இடவேண்டும். அனைத்து வகையான உயிர் உரங்களும் 50% மானியத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கின்றன விவசாயிகள் மானிய விலையில் பெற்று பயன் பெறலாம்" என்று உதவி இயக்குநர் தனலட்சுமி கூறினார்.

x