காவலர்கள் பற்றாக்குறையால் திணறும் வடலூர் காவல் நிலையம்!


காவலர்கள் பற்றாக்குறையால் வடலூர் காவல் நிலையம் திணறி வருகிறது. வேலை பளுவால் இங்கு பணியாற்றும் காவலர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் மைய நகரமாக வடலூர் உள்ளது. இங்கு உலகப் புகழ்பெற்ற அருட்பிரகாச வள்ளலாரின் சத்திய ஞானசபை அமைந்துள்ளது.

அரசு கல்லூரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், வாரச் சந்தை, அரசு மற்றும் தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள், சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் என எப்போதும் வடலூர் நகரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வடலூர் நகருக்குள் வந்து செல்கின்றனர்.

மேலும் சென்னை, கும்பகோணம், சேலம், கடலூர் என நான்கு வழிச் சாலையின் மையமாக வடலூர் அமைந்துள்ளது. இதனால் வடலூர் நகர் பகுதியில் இரவு, பகலாக போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு நகரின் காவல்நிலையத்தை நிர்வகிக்க போதிய காவலர்கள் இன்றி திண்டாடி வருகின்றனர்.

வடலூரில், கடந்த 1970-ம் ஆண்டு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளாக வடலூர் நகரப் பகுதி மற்றும் கருங்குழி, கொளக்குடி, மருவாய், நயினார்குப்பம், அரங்கமங்கலம், ராசாக்குப்பம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த காவல் நிலையம் தொடங்கிய போது 22 பேர் பணியில் இருந்தனர்.

தற்போது ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 28 பேர் பணியில் உள்ளனர். 1970-ல் இருந்த பணிச்சூழல், பணி அழுத்தம் கடந்த 50 ஆண்டுகளில் வெகுவாக மாறி விட்டது. அதை ஒப்பிடும் போது சொற்ப அளவிலே இந்த காவல் நிலையத்தில் காவலர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது, ஆய்வாளரின் வாகன ஓட்டுநர், காவல் நிலைய எழுத்தர், புகார்தாரர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கொண்டு வருவது, மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவது என பணிகள் கடந்த சில ஆண்டுகளில் இந்த காவல்நிலையத்தில் வெகுவாக அதிகரித்துள்ளன.

வள்ளலார் மையத்தை கொண்ட வடலூர் ஒரு சுற்றுலா நகரம். இங்குள்ள சத்திய ஞானசபைக்கு மாதம் தோறும் பூசம் நன்னாளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று நடப்பு பணியுடன் கூடுதல் பாதுகாப்பு பணியும் உள்ளது. 40 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், 28 பேர் பணிபுரிவதால் தொடர் பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சிக்கல்களால் பணித்திறன் குறைய வாய்ப்பிருக்கிறது என்று இந்த காவல்நிலையத்தை உற்றுநோக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

x