கோபி அருகே 93 ஆண்டு பழமையான பாலத்தில் தொடரும் அபாயகரமான பயணம்!


கோபி - டி.என் பாளையத்தை இணைக்கும் சாலையில் நன்செய் புளியம் பட்டியில் அமைந்துள்ள 93 ஆண்டுகள் பழமையான பாலம்

ஈரோடு: கோபி அருகே நன்செய் புளியம்பட்டியில், 93 ஆண்டுகள் பழமையான பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பாலப்பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், கரும்பு லாரிகள், கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் குறுகிய அளவிலான பழைய பாலத்தில் அபாயகரமாக பயணித்து வருகின்றன.

ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பாசனம் அளித்து வ்ருகின்றன. இதில், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட கோபி, கரட்டடிபாளையம், புளியம்பட்டி, லக்கம்பட்டி, குருமந்தூர் உள்ளிட்ட பகுதிகளையும், அரக்கன்கோட்டை பாசனத்துக்கு உட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம், பங்களாபுதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களையும் இணைக்கும் சாலையில், நன்செய் புளியம்பட்டி அருகே, பவானி ஆற்றின் குறுக்கே 1931-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.

அன்றைய போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப, 4.80 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட இந்த பாலம், 93 ஆண்டுகளைத் தொட்டும் இதுவரை விரிவுபடுத்தப்படவில்லை. போக்குவரத்து பெருக்கத்திற்கு ஏற்ப மாற்றுப்பாலமும் அமைக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் செயல்படும் சக்தி, பண்ணாரி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த குறுகிய, பழைய பாலத்தையே பயன்படுத்தி வருகின்றன. தூக்கநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் இந்த பாலத்தில் பயணிக்கின்றன.

மேலும், சுற்றுவட்டாரத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவியர் செல்லும் வகையில், 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன வாகனங்களும் இந்த குறுகிய பாலத்தைக் கடந்து சென்று வர வேண்டியுள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், இப்பகுதியில் புதிய பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து கொடிவேரி பாசனசபைத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: பவானிசாகர் அணை கட்டப்படும் முன்பு, பவானி ஆற்றின் குறுக்கே, சத்தியமங்கலம், பவானி, அத்தாணி மற்றும் நன்செய் புளியம்பட்டி ஆகிய நான்கு இடங்களில் மட்டும் பாலம் கட்டப்பட்டு இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட இந்த 4 பாலங்களில் 3 பாலங்களுக்கு மாற்றாக விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு விட்டன.

ஆனால், கோபி - டி.என்பாளையத்தை இணைக்கும் நன்செய் புளியம்பட்டி பாலம் மட்டும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. பள்ளி, கல்லூரி வாகனங்கள், கரும்பு லாரிகள், கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், இந்த பாலத்தைக் கடக்கும் போது அதிர்வுகள் ஏற்படுகின்றன. அதோடு, குறுகிய பாலம் காரணமாக போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், 93 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் பயன்பாட்டில் பாலம் இருப்பதால் அவற்றின் உறுதி தன்மையில் பழுது ஏற்பட்டுள்ளது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன நிலங்களை இணைக்கும் முக்கிய பாலமாகவும், சத்தியமங்கலம்- பவானி மற்றும் கோபி - ஈரோடு சாலைகளை இணைக்கும் பாலமாகவும் இந்த பாலம் உள்ளது.

இந்த பாலத்திற்கு மாற்று பாலம் அமைப்பது தொடர்பாக 8 ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதற்கான நில ஆர்ஜிதம் மற்றும் அடிப்படை பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. ஆனால், இதுவரை புதிய பாலம் அமைப்பதற்கான எந்த ஆயத்த பணிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.

கொடிவேரி அணை பாசன பகுதிகளில் அமைந்துள்ள, பல்வேறு ஊர்களில், சிறு கிராமங்களில் வாழும் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி இந்த பாலத்திற்கு மாற்று பாலம் அமைக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘கோபி - டிஎன் பாளையத்தை இணைக்கும் சாலையில், நன்செய் புளியம்பட்டியில், பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ. 21 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்’ என்றனர்.

x