வியத்தகு வலசை: பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதற்கு?


டார்க் ப்ளூ டைகர்

கோவை: இந்தியாவில் மட்டும் சுமார் 1,500 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் மற்றும் பறவைகள் வலசை செல்வது போல பட்டாம்பூச்சிகளும் வலசை செல்வது வழக்கம். இந்த இடம்பெயர்வில் கற்பனைக்கு அளவிட முடியாத வகையில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி இருக்கும்.

மிகச் சிறிய உயிரினமான பட்டாம்பூச்சி கடினமான, நீண்ட பயணங்களை செய்து இடம்பெயர்வது ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. பட்டாம்பூச்சிகள் வலசை செல்வதற்கு காலநிலை முக்கியப் பங்காற்றுகிறது. தென் மேற்கு பருவமழைக்கு முன்பாக கிழக்கு தொடர்ச்சி மலைக்கும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைக்கும் பட்டாம்பூச்சிகள் வலசை செல்கின்றன.

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலை அடங்கிய கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து பட்டாம்பூச்சிகள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான ஆனைமலை, நீலகிரிக்கு இடப்பெயர்வை தொடங்கி உள்ளன.

டபுள் பிராண்டட் குரோ

பூக்களின் மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்காற்றும் பட்டாம்பூச்சிகள், மனிதனின் உணவு பாதுகாப்பிலும் தனி இடத்தை பெறுகிறது. பறவைகள், சிலந்தி உள்ளிட்ட உயிரினங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உணவு சங்கிலியில் பட்டாம்பூச்சி உள்ளது.

இதுகுறித்து, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.பாவேந்தன் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி பகுதிகளில் நிலவும் காலநிலை மற்றும் உணவுக்காக சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலை, நாமக்கல் கொல்லிமலை, பச்சமலை ஆகிய கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து வரும். கடந்த 2023-ம் ஆண்டில் பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வு குறைவாக இருந்தது. நிகழாண்டில் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு உச்ச நிலையை எட்டியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ய தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து பல லட்சம் பட்டாம்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக இடம்பெயர தொடங்கியுள்ளன. கடந்த செப்டம்பர் 27, 29 ஆகிய தேதிகளில் தொடங்கிய பெரிய அளவிலான இடப்பெயர்வு சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, நீலகிரி பகுதிகளில் பட்டாம்பூச்சி ஆர்வலர்களால் கண்காணிக்கப்பட்டது. இதில் டைகர் வகை பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கைஅதிகளவில் இருந்தது. குரோ வகை பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

கோவை மாவட்டத்தில் சிறுமுகை, அன்னூர்,மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, அரசு பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வடவள்ளி, பீளமேடு,உப்பிலிபாளையம், சிங்காநல்லூர், செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பட்டாம்பூச்சிகளின் இடம் பெயர்வை கடந்த செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் காண முடிந்தது. குறிப்பாக, சிங்காநல்லூர் பகுதியில் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் இதனை கவனித்தனர். இதில் 95 சதவீதம் டைகர், 5 சதவீதம் க்ரோ வகை பட்டாம்பூச்சிகள் இருந்தன.

‘புளூ டைகர்’, ‘டார்க் புளூ டைகர்’, ‘காமன் குரோ’,‘டபுள் பிராண்டட் குரோ’, ஆகியவைதான் லட்சக்கணக்கில் கூட்டம், கூட்டமாக இடம் பெயர்ந்து செல்லும். அதேபோல ‘லெமன் பான்சி’, 'டவ்னி காஸ்டர்’, 'காமன் எமிகிரென்ட்', ‘சாக்லேட் பான்சி’ ஆகிய பட்டாம்பூச்சிகளும் வலசையில் செல்கின்றன. இந்த பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி, ஓசூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் மதுரைஆகிய பகுதிகளிலும் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு கண்காணிக்கப்பட்டது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தங்கிவிடும். இதன் அடுத்த தலைமுறை பட்டாம்பூச்சிகளே ஏப்ரல்-மே மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

x