மாணவர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்தின் அன்புக்குரிய தலைவராக விளங்கியவர் அப்துல் கலாம். மாணவராக, அறிவியல் அறிஞராக, குடியரசுத் தலைவராக எவ்வளவு உயரத்தை அடைந்தபோதும் வாழ்க்கையில் எப்போதும் எளிமையைக் கடைப்பிடித்தவர் கலாம். உயர் பதவியில் இருந்தபோதும் ஆடம்பரமாக இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகள் வாய்த்தபோதும் எளிமையாக இருக்கவே விரும்பினார்.
தனது வாழ்நாள் முழுவதும் மாணவர்களைச் சந்திக்கவும் அவர்களோடு உரையாடவும் அதிக நேரம் ஒதுக்கினார். பணிவான அவரது குணத்தால்தான் சாதாரண மக்களும் அவரோடு உரையாட முடிந்தது; தங்களில் ஒருவராக அவரைப் பார்க்க முடிந்தது. ஓர் இலக்கை அடைய முயற்சி செய்யும்போது பல விஷயங்கள் உங்களைத் திசைதிருப்பலாம். அப்போது எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து, தெளிந்து முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து உழைத்தால் கண்ட கனவு நிச்சயம் உங்கள் வசமாகும்.
தன் வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு தன் அறிவை விசாலப்படுத்திக் கொண்டவர் கலாம். “நம் நாட்டில் எதைச் சொன்னாலும் முடியாது எனச் சொல்கின்ற வியாதி இருக்கிறது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தோல்வி எனும் நோய்க்கு மாமருந்து” என நேர்மறை எண்ணங்களை விதைத்தார் கலாம். சொன்னபடி வாழ்ந்தும் காட்டினார். தனது வாழ்நாள் முழுவதும் தன்னம்பிக்கையை இழக்காதவராக இருந்தார். தோல்விகளைக் கண்டு பின்வாங்காதவர், தவறுகளிலிருந்து பாடம் கற்று முன்னேறியவர்.
அறிவியல், விண்வெளித் துறையில் பல சாதனைகளைப் படைத்து, இந்தியாவின் ‘ஏவுகணை நாயக’ராக உயர்ந்தார். ‘இந்தியா 2020’ எனும் கனவைக் கண்டதோடு, அதை இளைய சமுதாயமும் தங்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் மருத்துவம், விவசாயம், தொழில்நுட்பம், கல்வி போன்று பல துறைகளிலும் இந்தியா உயரத்தைத் தொட வேண்டும் என விரும்பினார்.
எந்தச் செயலிலும் சோர்வடையக் கூடாது, எதையும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது, எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும் என்றெல்லாம் கூறிய கலாம், “கற்றல் கற்பனையைத் தரும், கற்பனை எண்ணங்களை உருவாக்கும், எண்ணங்கள் அறிவை விரிவாக்கும், அறிவு உயரத்துக்கு அழைத்துச் செல்லும்” என்றார். - ராகா