வடகிழக்கு பருவ மழையில் திக்கித் திணறப் போகிறதா விழுப்புரம் நகரம்?


பிளாஸ்டிக் குப்பைகள் மண்டிக்கிடக்கும் கோலியனூரான் வாய்க்கால்.

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் உள்ள பெரிய வாய்க்கால்களில் செல்லும் கழிவுநீர் அனைத்தும் கிழக்கு பாண்டிரோடு, மகாராஜபுரம், தாமரைக் குளம் வழியாக, சாலை அகரம்,கோலியனுார் வரை சென்றடைகிறது. இந்த கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அடைத்து கொள்வதால், கழிவுநீர் தேங்கி நின்றுவிடுகிறது.

இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இரவில்கொசு தொல்லைகளில் சிக்கி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் வாய்க்காலில் கழிவுநீர் நிரம்பி, குடியிருப்புகளுக்கு முன் குளம் போல் தேங்கி நிற்கிறது. குழந்தைகள், முதியோர் உட்பட பலருக்கும் இதனால் தொற்று நோய் ஏற்படுகிறது.

இந்தச் சூழலில், விழுப்புரம் நக ராட்சி, நபார்டு வங்கி உதவியோடு ரூ. 8 கோடி மதிப்பீட்டில் தெளிமேடு கிராமம் தொடங்கி, விழுப்புரம் வழியாக கோலியனுார் வரை, கோலியனூரான் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை கடந்த 2017-ம்ஆண்டு தொடங்கியது. 3 கி.மீ தொலைவிலான இப்பணி யில், ஒரு கி.மீ அளவுக்கு பாலம் பணிகளும், 2 கி.மீ அளவுக்கு 2.50 மீட்டர் அகலத்தில் கோலியனூரான் வாய்க்கால் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றன.

இதில் தெளிமேடு கிராமத்தில் தலைப்பு மதகு, அனிச்சம்பாளையம் பகுதியில் தலைப்பு மதகு அமைக்கும் பணி 2020-ம்ஆண்டில் நிறைவு பெற்றது. தெளி மேடு - லட்சுமிபுரம் கிராமம் வரை 750 மீட்டர் வாய்க்கால் வெட்டி இரு அடி ஆழம் அமைக்கும் பணிகளும், விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் சிதலமடைந்துள்ள இடங்களில் 750 மீட்டர் வாய்க்கால் கட்டும் பணிகளும் முடிந்துள்ளன.

அதன்பின் கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரும் பணிக்குதனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங் களும் அகற்றப்படவில்லை. வடகிழக்கு பருவ மழை தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கால்வாய் மற்றும் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுவதோடு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் அனைத் தும் முடிந்து விடுகிறது.

கால்வாய் தூர்வாரப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சொல்லிக் கொண்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. வழக்கத்தை விட இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாதியளவு தூர் வாரினாலே ஒவ்வொரு பருவ மழையின் போதும் விழுப்புரம் நகரின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தற்போது, எந்த பணிகளும் நடைபெறாத நிலையில், விழுப்புரத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இது குறித்து பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகளிடம் கேட்ட போது, “பொதுமக்கள், வியா பாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கழிவுநீர் கால்வாயில் தேங்காமல் தண்ணீர் தடையின்றி செல்வதற்கான வழி ஏற்படும்.

கோலியனுாரான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாதவரை தாழ்வான பகுதி களில் வெள்ளம் சூழ்வதை தவிர்க்கஇயலாது. இதில் அரசியல் குறுக்கீடுகள் உள்ளவரை விழுப்புரம் நகரம் மழைநீரில் தத்தளிப்பதை தவிர்க்க முடியாது” என்கிறார்கள்.

கோலியனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி தீர்வு காணப்பட்டு, அதன் பின் வாய்க்காலை சீரமைப்பதே நீண்டகாலத்துக்கு பயனளிக்கும் என்று விழுப்புரம் நகர வாசிகள் தெரிவிக்கின்றனர்.

x