ஒரு கட்டு ரூ.2-க்கு கொள்முதல்: சூளகிரி சந்தைக்கு கொத்தமல்லி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு


சூளகிரி அருகே திம்மசந்திரம் கிராமத்தில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அறுவடையை புறக்கணித்து கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சந்தைக்கு கொத்தமல்லி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.4 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், வேப்பனப்பள்ளி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் அதிகளவில் காய்கறிகள், கீரை வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேரடி கொள்முதல் சந்தை: இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கொத்தமல்லியை இடைத் தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக சூளகிரி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இச்சந்தையில் வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து, கொத்தமல்லியின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.35 முதல் ரூ.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது, சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.4 வரை மட்டும் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விலை நிர்ணயம் செய்யும் நுகர்வு: இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திருமணம், திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்றதால், கொத்தமல்லியின் நுகர்வும் அதிகரித்தது. குறிப்பாக, கிராமங்களில் நடந்த கோயில் விழாக்களில் அசைவ உணவுகளில் கொத்தமல்லி அதிக அளவில் சேர்க்கப்பட்டது. இதனால், தேவை அதிகரித்து, நல்ல விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

தற்போது, மகசூல் அதிகரித்துள்ளதாலும், நுகர்வு குறைந்துள்ளதாலும் விலை சரிந்துள்ளது. ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.4 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இங்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்லும் கொத்தமல்லி போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டும் வகையில் சில்லறை விற்பனையில் ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர். இவ்விலை சரிவு இன்னும் 10 முதல் 15 நாட்கள் நீடிக்கும். புரட்டாசி மாதம் முடிந்த பின்னர் திருமணங்கள் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை நாட்கள் வரவுள்லதால், விலை உயர வாய்ப்புள்ளது.

உலர் கொத்தமல்லி இலை: கொத்தமல்லியைப் பொறுத்த வரை ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறை மகசூல், நுகர்வு அடிப்படையில் விலையில் ஏற்ற, இறக்கம் இருப்பதால், உலர் கொத்தமல்லி மற்றும் இலை தூள் உள்ளிட்ட மதிப்புக் கூட்டு பொருட்கள் தயார் செய்ய விவசாயிகளுக்கு, வேளாண் விற்பனை துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x