கிருஷ்ணகிரியில் விளைச்சல் பாதிப்பு - தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை


ராயக்கோட்டை தக்காளி சந்தையில் விற்பனைக்காக கிரேடுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளி பழங்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி செடிகளில் நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளி விலை உயர்ந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 30 டன் தக்காளி மகசூல் கிடைக்கிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளி, ராயக்கோட்டை, ஓசூர் காய்கறி சந்தைகள் மூலம் பல மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ராயக்கோட்டை தக்காளி சந்தையில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்தது. கடந்த வாரம் 25 கிலோ எடை கொண்ட கூடை (கிரேடு) விலை ரூ.600 முதல் அதிகபட்சமாக, ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிரேடு ரூ.1,700 வரை விற்கப்பட்டது.

50 டன் தக்காளி வரத்து: தக்காளி விலை உயர்வு குறித்து தக்காளி மண்டி உரிமையாளர் சீனிவாசன் மற்றும் சிலர் கூறியதாவது: தக்காளியை பொறுத்தவரை ஆண்டுதோறும், மே, ஜூன் மாத சீசனில் வரத்து அதிகமாக இருக்கும். பிற மாதங்களில் 30 முதல் 50 டன் வரை வரத்து இருக்கும். தற்போது தக்காளி செடிகளில் புதிய வகை நோய் தாக்குதல் ஏற்படுவதால் விளைச்சல் குறைவாக உள்ளது. மேலும், ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு தக்காளி செடிகள் அதிகளவில் அழிந்துவிட்டன.

ஆந்திர மாநில பகுதிகளில் இருந்துதான் சென்னை, வேலூர், சேலம், அரக்கோணம், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்குவர். ராயக்கோட்டை சந்தையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மார்த்தாண்டம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளுக்கு அதிகளவில் செல்லும்.

ரூ.600-லிருந்து - ரூ.1,800 வரை: இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து குறைந்ததால், அங்கு தக்காளிகளை கொள்முதல் செய்த, சென்னை, வேலூர் மாவட்ட வியாபாரிகள் தற்போது ராயக்கோட்டைக்கு வரத் தொடங்கி உள்ளனர். தக்காளி விளைச்சல் குறைந்ததால் பெரியளவில் பாதிப்பில்லை.

ஆந்திர மாநிலத்தில் தக்காளி விளைச்சல் சரிவாலும், வியாபாரிகள் அதிகளவில் ராயக்கோட்டை சந்தைக்கு வரத் தொடங்கியதால் தான் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது தரத்தை பொறுத்து ஒரு கிரேடு, குறைந்தபட்சம் ரூ.600-லிருந்து, அதிகபட்சமாக ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், போக்குவரத்து இதரசெலவுகளுடன் ரூ.60 முதல், ரூ.80 வரை என்ற விலையில் விற்பனை செய்கின்றனர். இன்னும் 15 நாட்களுக்கு பிறகு தக்காளி விலை உயரும். கிலோ ரூ.100-யை தாண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

x