கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது - தயாரானது விரிவான திட்ட அறிக்கை!


கோவை: கோவை மத்திய சிறையை இடமாற்றம் செய்யும் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை நஞ்சப்பா சாலையில் செயல்பட்டு வரும் மத்திய சிறையை இடமாற்றம் செய்துவிட்டு, இந்த வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது.

சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கரில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன.

இதற்கிடையே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் செம்மொழிப் பூங்கா வளாகம் கட்டுமானப் பணி கடந்தாண்டு இறுதியில் தொடங்கி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சிறை வளாகத்தின் மற்றொரு பகுதியில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரமடை அருகே பிளிச்சி என்ற பகுதியில் சிறை வளாகம் கட்ட போதிய இடம் இருப்பது கண்டறியப்பட்டு, சிறை வளாகத்துக்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாாிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறைச்சாலையை ஒட்டிய இடங்களில் அடுத்தடுத்து திட்டப்பணிகள் தொடங்குவதால் சிறைச்சாலையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

பிளிச்சி பகுதியில் சிறைச் சாலை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறை வடைந்துள்ளது. காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 95 ஏக்கர் பரப்பளவில் சிறைக் கட்டிடங்கள் கட்டப்படும்.

கைதிகள் தங்குவதற்கான கட்டிடங்கள், அவர்கள் பணிபுரியும் தொழிற்கூட கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பு வெளியானதும், கட்டுமானப் பணிக்கு தேவையான தகுந்த நிறுவனம், தொடர்புடைய துறையின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்’’ என்றனர்.

x