கோவையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வார்ப்பட ஏற்றுமதி அதிகரிப்பு!


கோவை: சீனாவுக்கு அடுத்து ஐரோப்பிய நாடுகளில் அதிக பணி ஆணைகளை பெற்று தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக கோவை வார்ப்பட தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். தொழில் நகரான கோவை வார்ப்படம் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவனங்களும், 150 பெரிய வார்ப்பட நிறுவனங்களும் செயல்படுகின்றன.

உற்பத்திக்கு தேவைப்படும் பிக் அயர்ன், ஸ்கிராப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மூலப்பொருட்களின் விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்ட நிலையில், மத்திய அரசு பட்ஜெட் அறிவிப்புக்கு பின் விலை குறைந்துள்ளது. இதனால் சீனாவுக்கு போட்டியாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு கோவையில் இருந்து வார்ப்படம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வார்ப்பட தேசிய தொழில் அமைப்பின் (ஐஐஎப் ) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: உற்பத்தித்துறையின் கீழ் செயல்படும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு வார்ப்படம் முக்கிய மூலப்பொருளாகும். இதன் காரணமாகவே ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் துறையாக கருதப்படுகிறது.

பிக் அயர்ன், ஸ்கிராப் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. அதன் காரணமாக உற்பத்தியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வார்ப்பட உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இதனால் உள்நாட்டில் விலை சீராக உள்ளது. வார்ப்பட தொழிலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. உலக சந்தையில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக வார்ப்படம் விநியோகிப்பதற்கான பணி ஆணைகளை பெற்று வருகின்றன.

ஆட்டோமொபைல், பம்ப்செட் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பொறியியல் பொருட்களான ஏர் கம்ப்ரசர் உள்ளிட்டவற்றின் தேவையும் தொடர்ந்து நிலையாக உள்ளது. இதனால் வார்ப்பட தொழிலில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகருக்கு வெளியே தொழிற்பூங்காக்கள்: கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் நகர் பகுதிகளில் முன்பு செயல்பட்டு வந்த வார்ப்படம் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்பட தொடங்கின. எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு குறு, சிறு பவுண்டரி தொழில்துறையினர் ஒன்றிணைந்து அரசூரில் பிரத்யேக தொழிற்பூங்காவை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

பெரிய நிறுவனங்களும் நகர் பகுதிக்கு வெளியே செயல்பட தொடங்கியுள்ளன. சீனாவுக்கு இணையாக மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மேலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாகும்.

x