ஸ்மார்ட்போன் சாதனம் திருடு போவதை தடுப்பது முதல் அதிலிருக்கும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது வரை, புதிய ஆன்ட்ராய்டு 15 இயங்குதளம் அநேக அனுகூலங்களை வழங்கத் தயாராக உள்ளது.
மொபைல் போன் பயன்படுத்துவோர் மத்தியில் அதனை களவுகொடுப்பது பெரும் சவாலாக உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் அரிது என்றளவில் மக்கள் மத்தியிலான நவீன சாதனத்தின் புழக்கம் அதிகரித்திருத்துள்ளது. அவற்றிலும் பெரும்பாலானவை, அந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட சேவைகளின் பொருட்டு விலை உயர்ந்தவை என்பதால், ஸ்மார்ட்போன்களை குறிவைத்து திருடும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே மொபைல் போன்கள் திருடு போவதை தடுக்கவும், அப்படியே திருடு போனால் அவற்றை முடக்கவும் பயனர்கள் விரும்புகின்றனர்.
மொபைல் போன் களவு போவதில் இன்னொரு பெரும் சவாலாக அதிலுள்ள தரவுகள் இருக்கின்றன. தனியுரிமை சார்ந்த புகைப்படங்கள், கோப்புகள், நிதியாதார தகவல்கள் உள்ளிட்டவை களவு கும்பலின் கைகளுக்குச் செல்வதை பயனர்கள் விரும்புவதில்லை. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் மத்தியிலான இந்த சவால்களுக்கு, ஆன்ட்ராய்டு 15 பதிப்பு பதிலளிக்கத் தயாராக உள்ளது.
உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மொபைல் போன்களை கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளமே ஆக்கிரமித்துள்ளது. அவற்றின் அடுத்த மேம்பட்ட பதிப்பாக ஆன்ட்ராய்டு 15 வெளியாக உள்ளது. பிப்ரவரி மாதம் இதன் டெவலப்பர் முன்னோட்ட பதிப்பு அறிமுகமானது. தொடர்ந்து கடந்த மாதம் முதல் பீட்டா பதிப்பு வெளியானது. இதன் இறுதி வெளியீடு மூன்றாம் காலாண்டான ஜூலை - செப்டம்பர் மாதங்களில் வெளியாக உள்ளது. ஆன்ட்ராய்டு 10க்கு மேலான பதிப்புகளில் இயங்குதளம் கொண்ட மொபைல்போன்களை பயன்படுத்துவோர், ஆன்ட்ராய்டு 15க்கு தங்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதனிடையே ஆன்ட்ராய்டு 15 பதிப்பின் பல்வேறு அம்சங்களில், திருட்டுக்கு எதிரான அதன் நுட்பங்கள் வரவேற்பு பெற்று வருகின்றன. அதில் முதலாவதாக மொபைல் போனை திருடுவோர், அதனை மீட்டமைத்து மறுவிற்பனை செய்வதை சவாலாக்குகிறது. இதன் மூலம், ஒரு சாதனம் திருடப்பட்டால், அதனை உரிமையாளரின் சான்றுகள் இல்லாது விற்பது சவாலாகும். இதன் மூலம் மொபைல் போனை திருடுவோர் நோக்கமே கெடுகிறது. இது மொபைல்போன்கள் அதிக எண்ணிக்கையில் திருடு போவதை தடுக்கும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக பிரைவேட் ஸ்பேஸ் என்பது செயல்படும். இது முக்கியமான செயலிகள் மற்றும் தரவுகளை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனுக்குள் ஒரு தனியான, பாதுகாப்பான பகுதியை உருவாக்குவதன் மூலம், பயனர்கள் உடல்நலம் அல்லது நிதித்தரவு போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட செயலிகளை மறைக்கவும் பூட்டவும் முடியும். இது தரவு மீறல்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் மொபைல்போனை களவாடும் நபர் அந்த சாதனத்திற்கான அணுகலைப் பெற்றாலும், பயனரின் தரவுகளை அணுக அவரது கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் அவசியமாகும்.
இன்னொரு பாதுகாப்பு அம்சமாக திருடு போகும்போது தானாக பூட்டிக்கொள்ளவும் செய்யும். மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திருட்டுடன் தொடர்புடைய பொதுவான இயக்கங்களை அடையாளம் காண இயலும். அதாவது, பயனரின் கையிலிருந்து ஸ்மார்ட்போனை பறித்துக்கொண்டு தப்பியோடி மறையும் நபர், அதே வேகத்தில் திரை திறந்திருக்கும் அந்த மொபைலின் சகலங்களையும் அணுகும் ஆபத்து உண்டு. ஆனால் ஆன்ட்ராய்டு 15-ன் ஏஐ நுட்பம், அத்தகைய திருட்டு நடத்தை கண்டறியப்பட்டால், ஃபோன் திரை தானாகவே பூட்டிக்கொள்ளவும் செய்யும்.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!