சாட்ஜிபிடி சரிதம் –26; ஏஐ நுட்பத்தின் தணியாத தாகம்!


சாட்ஜிபிடி தாகம்

சாட்ஜிபிடி போன்ற ஏஐ நுட்பங்கள் தொடர்பாக பதில் காண வேண்டிய முக்கிய கேள்விகள் இருப்பதை பார்த்தோம். இந்த வரிசையில், ஏஐ நுட்பங்களுக்குள் மறைந்திருக்கும் சார்பு தன்மைகளையும், அவற்றின் நிஜ உலக பாதிப்பைகளையும் தீவிரமாக அலசுவதற்கு முன், சாட்ஜிபிடி தொடர்பான ஒரு சுவாரசியமான கேள்வியை கேட்டுக்கொள்ளலாம்.

சாட்ஜிபிடியுடன் கோடிக்கணக்கானோர் உரையாடி வருகின்றனர். அதன் பதில் சொல்லும் போக்குகளில் பிழைகளையும், அவற்றை சீராக்கும் நெளிவு சுளிவுகளையும் வல்லுனர்கள் கண்டறிந்து வருகின்றனர். எல்லாம் சரி, சாட்ஜிபிடியின் முகம் எப்படி இருக்கும் என யாருக்கேனும் தெரியுமா?

சாட்ஜிபிடியின் தோற்றம் தொடர்பான இந்த கேள்வி சுவாரசியமானது மட்டும் அல்ல, சிந்தனைக்கும் உரியது. ஒரு பக்கம் இது உளவியல் சார்ந்த துணை கேள்விகளை எழுப்பக்கூடியது. மனிதர்கள் போலவே உரையாடும் திறன் கொண்ட சாட்பாட் என சாட்ஜிபிடியை வர்ணிக்கிறோம், ஆனால் அதன் உருவத்தை யாரும் கண்ணால் பார்த்ததில்லை. இந்த சாட்பாட் ஒரு மென்பொருள் தொகுப்பு என்பதால் அதற்கு உருவமோ, தோற்றமோ இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனால், சாட்பாட்கள் மனிதர்களோடு உரையாடும் திறன் பெற்றிருப்பதோடு, தனிமை போக்கும் துணையாக இருக்கலாம், நட்பு பாராட்டும் தோழமையாக இருக்கலாம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சூழலில், முகமில்லா மென்பொருள் அமைப்புகளுடன் பேசுவதும், உறவு கொள்வதும் என்னவிதமான உளவியல் சிக்கல்களை உண்டாக்கும் என்பது பற்றி அலசல்களும், ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

சாட்பாட்களுக்கும் உண்டா முகம்?

இந்த சிக்கலுக்கு தீர்வாக, சாட்பாட்களுக்கு முகம் இருக்க வேண்டும், அவற்றை ஆளுமை கொண்டதாக உருவாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டு, இவை நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. இவ்வளவு ஏன், உணர்வுள்ள சாட்பாட்களை உருவாக்கும் முயற்சியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் சாட்ஜிபிடியின் தோற்றம் தொடர்பான கேள்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம் என்றாலும், இப்போது நாம் பார்க்க இருக்கும் விஷயத்தின் தன்மைக்கு ஏற்ப, சாட்ஜிபிடி முகமோ, வரையறுக்கப்பட்ட வடிவமோ இல்லாமல், மென்பொருள் அமைப்பாக, கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னகளுக்குள்ளும், அவற்றுடன் தொடர்பு கொள்ள கிளவுட் சேவை அமைப்புகளுக்குள்ளும் விரவியிருக்கிறது என நடைமுறை நோக்கில் காட்சிப்படுத்திக்கொள்ளலாம்.

மின்னணு சாதனங்களின் ’தாகம்’

பிரித்தளிக்கப்பட்ட கம்ப்யூட்டிங் என்று சொல்வது போல, எண்ணற்ற கம்ப்யூட்டர்களில் பரவியிருக்கும் மென்பொருள் தொகுப்பு என்பது சாட்ஜிபிடி இயங்கும் சிக்கலான விதத்தையும் புரிந்து கொள்ள உதவலாம். இன்னும் எளிதாக சொல்வது என்றால், சாட்ஜிபிடி அதை இயக்கும் டேட்டா சென்டர்கள் எனப்படும் தரவு மையங்கள் போன்றவற்றின் வடிவில் இருக்கிறது என்றும் குறிப்பிடலாம்.

இந்த தரவு மையங்கள், பெரும் தாகம் கொண்டவையாக இருப்பதுதான் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ நுட்பங்களினால் உண்டாகும் எதிர்பாராத பிரச்சனைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதாவது தரவு மையங்களை குளிர வைக்க தினமும் எக்கச்சக்கமான அளவு தண்ணீர் தேவைப்படுகின்றன.

ஏற்கனவே உலகில் தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருக்கும் சூழலில், ஏஐ சாட்பாட்களை இயக்க தண்ணீரை பாய்ச்சிக்கொண்டிருப்பது இந்த பிரச்சனையை பலமடங்காக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. இது அலட்சியம் செய்யாமல் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினையாகவும் அமைகிறது.

கம்ப்யூட்டர் சார்ந்த தரவு மையங்களை இயக்க குளிர்விக்கும் அமைப்பு தேவை; இதற்கு தண்ணீர் வளம் தேவைப்படும் என்பதெல்லாம் நன்கறியப்பட்ட தகவல்கள் என்றாலும், சாட்ஜிபிடியின் தண்ணீர் தாகம் பற்றி அண்மையில் வெளியாகி இருக்கும் ஆய்வு தகவல்கள் இந்த பிரச்சனையின் புதிய பரிமாணத்தை உணர்த்தி திகைக்க வைக்கிறது.

தண்ணீர்

சாட்ஜிபிடியை பொறுத்தவரை அதன் செயல்பாடுகளுக்கு மட்டும் அல்லாமல், அதன் பயிற்சிக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தண்ணீர் வளம் தேவைப்பட்டிருக்கிறது; தொடர்ந்து தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஜிபிடி- 3 வடிவத்திற்கான பயிற்சிக்கு மட்டும், ஏழு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, சாட்ஜிபிடியுடன் பயனாளிகள் உரையாடும் போதெல்லாம் அது மறுமுனையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா ரிவர்ஸைடு பல்கலை மற்றும் டெக்சாஸ் ஆர்லிங்க்டன் பல்கலை ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், ஏஐ தாகத்தை தணிப்பது எப்படி என பொருள் தரும் Making AI Less Thirsty என்ற தலைப்பிலான கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. ஜிபிடி-3 வடிவத்திற்கு தரவுகள் கொண்டு பயிற்சி அளிக்க, ஓர் அணுஉலையை குளிர்விக்க தேவையான தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இந்த கட்டுரை கணிக்கிறது.

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், இதன் பயிற்சிக்கு தேவைப்பட்ட காலத்தை குறிப்பிடாததால் ஆய்வாளர்கள் இதற்கான தண்ணீர் பயன்பாட்டை கணிப்பதில் சிக்கல் இருந்துள்ளது. எனினும், சாட்ஜிபிடி நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், ஏஐ பயிற்சிக்காக சூப்பர் கம்ப்யூட்டர்களை நிர்மாணித்து, இவை பத்தாயிரம் கிராபிக் கார்டுகள் மற்றும் 2,85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராசரஸர் அமைப்புகள் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவற்றை குளிர்விக்க தேவைப்படக்கூடிய தண்ணீரின் அளவை எளிதாக கணக்கிட்டு நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம்.

தண்ணீர் தாகம்

இந்த கணக்கின்படி, பார்த்தால் சாட்ஜிபிடியுடனான சாதாரண உரையாடலின் போது 25 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நேரத்தில் அதற்கு 500 மிலி தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி என்றால், சாட்ஜிபிடியுடன் உலக அளவில் பயனாளிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் உரையாடலுக்கு தேவைப்படக்கூடிய தண்ணீரின் அளவையும், அதன் தாக்கத்தையும் நினைத்துப் பாருங்கள். எனவேதான் ஏஐ மென்பொருள் அமைப்பை பெரும் தாகம் கொண்டவை என குறிப்பிடுகின்றனர்.

ஆக சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, அவற்றை குளிர்விக்கத் தண்ணீர் தேவைப்பட்டு கொண்டேயிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதுவும், இந்த தண்ணீரும் நன்னீராக இருக்க வேண்டும். ஏனெனில், குடிநீருக்காக பயன்படுத்தப்படும் நன்னீர் தவிர வேறு விதமான தண்ணீர், தரவு மைய பயன்பாட்டிற்கு பொருத்தமாக இருக்காது என்கின்றனர்.

சாட்ஜிபிடியும், அதன் போட்டி சாட்பாட்களும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தால் அதற்கான விலையை கொடுப்பது யார்?

கம்ப்யூட்டர் அமைப்புகளை குளிர்விக்க தண்ணீர் தேவை என்பது நன்கறிந்த விஷயம் தான் என்றாலும், ஏஐ அமைப்புகள் செயல்பாட்டிற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு நினைத்து பார்க்க முடியாததாக இருக்கிறது. இதை சமாளிக்க, அதிக வெப்பம் இல்லாத இரவு நேரங்களில் ஏஐ மென்பொருள்களுக்கு பயிற்சி அளிக்கலாம் எனும் யோசனை எல்லாம் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், இரவு நேர பயன்பாடு காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயன்பாடாக அமையாது என்ற எதிர்கருத்தும் சொல்லப்படுகிறது.

சாட்ஜிபிடி மட்டும் அல்ல, கூகுளின் தரவு மையங்கள், அமேசான் தரவு மையங்கள் உள்ளிட்டவற்றிலும் பெருமளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளிர்பான தயாரிப்பிற்காக ஆற்று நீர் பயன்படுத்தப்படுவது போன்றதைவிட பல மடங்கு இது பிரச்சனைக்குரியது.

ஏஐ உலகின் தண்ணீர் தேவை

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சி சூழலும் அதிகரித்து வரும் நிலையில், ஏஐ சாட்பாட்களின் தண்ணீர் பயன்பாடு புதிய சவாலாக அமையலாம். சாட்பாட்களின் வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றம் என்றாலும், இதனால் அதிகம் பயன்பெறப்போவது ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட இன்னும் பிற தனியார் நிறுவனங்கள் மட்டுமே.

ஆனால், ஏஐ நுட்பத்தின் பக்கவிளைவுகளாலும், எதிர்விளைவுகளாலும் ஒட்டுமொத்த மனித சமூகமே அதிகம் பாதிக்கப்படப்போகிறது. எனவே, ஏஐ நுட்பங்களையும், அதை உருவாக்கும் நிறுவனங்களையும் பலவித நோக்கில் உரிய சட்டங்களால் கட்டுப்படுத்துவது பற்றி தீவிரமாக விவாதிக்கத் துவங்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் வேறு சில நாடுகள் ஏஐ சட்டம் உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளன.

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

x