சென்னை - மொரீஷியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்... 173 பயணிகளுடன் பறந்தது முதல் விமானம்!


சென்னையில் இருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது.

சென்னை விமான நிலையம்...

கடந்த 2020- ம் ஆண்டில் கொரோனா பரவல் அதிகரித்தபோது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் மீண்டும் படிப்படியாக விமான சேவைகள் தொடங்கின. ஆனாலும் சில காரணங்களால் ஹாங்காங் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு மட்டும் சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு நாடுகளுக்கும் விமான சேவைகள் மீண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை, முதல் விமானம் சென்னையில் இருந்து மொரீசியஸ் நாட்டிற்கு புறப்பட்டது. அதில் 173 பயணிகள் பயணித்தனர்.

சென்னை விமான நிலையம்...

மொரீஷியஸில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்பட்டு சென்னை வரும் விமானம் சென்னையில் இருந்து சனிக்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது. சென்னை - மொரீஷியஸ் இடையேயான வாராந்திர விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் இயக்குகிறது.

இதே போல ஹாங்காங்- சென்னை- ஹாங்காங் இடையே, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை கடந்த மாதம் முதல் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாடுகளுக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

x