ரயில் நிலையங்களில் ரீல்ஸ் இம்சை... இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்தே இளசுகளை எச்சரித்த போலீஸார்


போலீஸ் பிடியில் மன்னிப்பு கேட்கும் சீமா

மும்பை ரயில் நிலையங்களில் ரீல்ஸ் என்ற பெயரில், சக பயணிகளுக்கும், ரயில்வே சேவைக்கும் இடையூறாக செயல்பட்ட இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணை வைத்தே, அவரை ஒத்த இதர ரீல்ஸ் மோகம் கொண்ட இளசுகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுவித்துள்ளனர்.

ரயில் நிலையங்கள், ரயிலினுள் மற்றும் மெட்ரோ வளாகங்கள் என ரீல்ஸ் மோகம் கொண்டவர்களால், சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கான லேட்டஸ்ட் உதாரணம் சீமா கனோஜியா. இன்ஸ்டாவின் வட இந்திய பிரபலமான இவர் பாலிவுட் பாடல்களை ஒலிக்கவிட்டு ரயில் நிலைய பயணிகளுக்கு தொந்தரவாகும் வகையில் ரயில் மேடைகளில் நடனமாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த வகையில் இரு வாரங்கள் முன்னதாக மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில், சீமா போட்ட குத்தாட்டத்தின் வீடியோ இணையத்தில் வெகுவாக ஈர்த்தது. ரயிலில் இருந்து நடைமேடையில் குதிக்கும் சீமா, தனது வழக்காமான ஆட்டத்தை அதிரடியாக ஆரம்பித்தார். அப்போது சக ஆண் பயணிகள் இருவர் மீது இடித்துக்கொள்கிறார். ஆனபோதும் எவரைப் பற்றியும் கவலை கொள்ளாது, ரீல்ஸ் முழுமைக்கும் உடலை வெட்டி ஆடுகிறார். இன்ஸ்டாவில் பதியப்பட்ட இந்த வீடியோ இதர சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வலம் வந்தது.

இதனைப் பகிர்ந்த நெட்டிசன்கள், கூட்டம் நெட்டித் தள்ளும் பொது இடங்களில், சீமா கனோஜியா போன்றோரின் நடவடிக்கைக்கு முடிவுகட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதே போன்று சீமா மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அது பாடமாகவும் அமையும் எனத் தெரிவித்தார்கள். இதனையடுத்து சீமாவை வரவழைத்த போலீஸார் அவருக்கு வித்தியாசமான தண்டனை தந்தனர்.

அதன்படி, சீமா கனோஜியாவை வைத்தே பொதுஇடங்களில் ரீல்ஸ் மோகம் கூடாது என்ற அறிவுறுத்தல் வீடியோ ஒன்றினை போலீசார் வெளியிடச்செய்தனர். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

x