நள்ளிரவில் முற்றிலும் முடங்கிய வாட்ஸ் அப் சேவை... திடீர் செயலிழப்பால் பயனாளர்கள் திகைப்பு!


உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நேற்று நள்ளிரவில் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படும் வாட்ஸ் அப் உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப் நேற்று இரவு 11.45 க்கு திடீரென முடங்கியது. இதற்கான காரணம் என்னவென்று மெட்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை.

வாட்ஸ் அப் பயனர்கள் செயலி மற்றும் இணையதளத்தில் அதை பயன்படுத்த முடியவில்லை என்றும், சிலருக்கு இன்ஸ்டாகிராமும் இயங்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இது இந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய செயலிழப்பாகும்.

இதற்கு முன் கடந்த மாதம் 5-ம் தேதி இதேபோல வாட்ஸ் அப் திடீரென செயல் இழந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பயனாளர்கள் மெட்டாவை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் மீண்டும் வாட்ஸ் அப் முடக்கத்தால் மெட்டா மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இணைய செயலிழப்பைக் கண்காணிக்கும் பிரபல நிறுவனமான டவுன்டெக்டர் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளதாக தெரிவித்தது. ஆனாலும், முடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்பாராத இந்த முடக்கத்தை சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் வாட்ஸ் அப் சேவை சீராகும் எனவும் மெட்டா நிறுவனம் அறிவித்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே வாட்ஸ் அப் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் மீண்டும் இயங்க தொடங்கியதால் மற்ற சமூக வலைதளங்களில் உலாவி வந்தவர்கள் மீண்டும் வாட்ஸ் அப் சேவைக்குத் திரும்பினர்.

x