புதுப்பொலிவு பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்திய அரசின் அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தை ரூ.6 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு சார்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்து வதற்காக அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டம் 2022-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக அதிக வருவாய், நகரங்களின் பாரம்பரிய சிறப்பு, வழித்தடம் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கோவில்பட்டி, பழநி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.73.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரயில் நிலைய முகப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் தங்கும் அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலைய வடிவமைப்பு, 5 ஜி இணைய சேவை, நடைமேடைகளின் நீளத்தை அதிகரித்து மேற்கூரை அமைத்தல், மின் தூக்கி(லிப்ட்), 694 சதுர மீட்டர் பரப்பளவில் இருசக்கர வாகனக் காப்பகம், 470 சதுர மீட்டர் பரப்பளவில் வாகனக் காப்பகம், அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, நடைபாதை, ரயில் நிலையச் சாலை, காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், டிஜிட்டல் அறிவிப்பு பலகை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் லிப்ட், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், வாகன நிறுத்துமிட பணிகள் முடிந்துள்ளன. இதர கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். மின்தூக்கி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x