மதுரை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை செம்மையாக செயல்படுத்திய வகையில் மாநிலத்திலேயே மதுரை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.
மாநகராட்சிகளில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை அதன் பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் அடிப்படையில் நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி), உள்ளூர் திட்டக் குழுமம் ஆகியவை வழங்கி வருகின்றன. இந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் கடந்த காலத்தில் பொதுமக்கள், வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அங்கீகாரம் பெற்ற உரிமம் பதிவு பெற்ற பொறியாளர் மூலம், கட்டிடத்தின் வரைப்படம், அதற்கான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்வார்கள்.
கட்டிடம் 1,500 சதுர அடிக்குள் இருந்தால், மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி பொறியாளர், உதவி ஆணையர் ஆய்வுக்கு பிறகு கட்டிட வரைப்பட அனுமதி வழங்கப்படும். 1,500 சதுர அடிக்கு மேலாக இருந்தால் உதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட கட்டிட அனுமதி விண்ணப்பத்தை அவரது ஆய்வுக்கு பிறகு, மாநகராட்சி மைய அலுவலகத்தின் நகரமைப்பு அலுவலர், ஆணையாளர் ஆகியோர் பார்வைக்கு அனுப்புவார்கள். அவர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கியப் பிறகே, கட்டிட வரைப்பட அனுமதி வழங்கப்படும்.
இந்த முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கு, மக்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். விரைவாக கட்டிட அனுமதி கிடைக்காததுடன், கீழ் நிலை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையும், பதிவு பெற்ற பொறியாளர்களும் பணம் கேட்டு கட்டிட அனுமதி பெற வரும் மக்களை பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாக்கினார்கள்.
இந்நிலையில் தமிழத்தில் 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி பரப்பளவுக்குள் வீடு கட்டுவோர் இணைய வழியிலேயே விண்ணப்பித்து, உடனடியாக ஒப்புதல் பெறும் நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி, சுய சான்று அடிப்படையில் பொதுமக்களே தங்கள் வீட்டின் கட்டிடத்திற்கான வரைப்படம், ஆவணங்களை https://onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அப்லோடு செய்ய வேண்டும்.
வீடு கட்டுவதற்கான வரைப்படங்களைத் தயார் செய்ய பொதுமக்களால் முடியாது. இதற்கென உரிமம் பெற்ற பொறியாளர்கள் மட்டுமே அதனை தயாரிக்க முடியும். உரிமம் பெற்ற பொறியாளர்கள் தயாரித்து அளிக்கும் வரைப்படத்தை வைத்து வீட்டின் உரிமையாளர் இ-சேவை மையங்கள் மூலமோ, பொறியாளர் மூலமோ விண்ணப்பிக்கலாம். சதுர அடிக்கு ரூ.88 வீதம், கட்டிட அனுமதிக்கான கட்டணம் வந்து நிற்கும். அதற்கான தொகையைக் கட்டியதும், அடுத்த 5 நிமிடங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டிட வரைபட அனுமதி கிடைத்து விடுகிறது.
மதுரை மாநகராட்சியில், கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அதிகாரிகள் தலையீடு, லஞ்சம் இல்லாமல் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதால் பொதுமக்களிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை மொத்தம் 516 கட்டிடங்களுக்கு பொதுமக்கள் வரைப்பட அனுமதி பெற்றுள்ளனர்.
இதன் மூலம், மாநகராட்சிக்கு ரூ.5 கோடியே 84 லட்சத்து 24 ஆயிரத்து 654 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாநிலத்திலே மாநகராட்சிகள் அளவில் கட்டிட அனுமதி வழங்குவதிலும், வருவாய் ஈட்டுவதிலும் மதுரை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பயனடைய வசதியாக இந்த சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தால் மதுரை மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவோர் எண்ணிக்கையும், மாநகராட்சி வருவாயும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த திட்டம் வருவதற்கு, முன்பு மாகநராட்சியில் மாதம் ஐந்து மண்டலங்களுக்கு 80 முதல் 90 கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 200 கட்டிடங்கள் வரை பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுகிறார்கள். இதன் மூலம், மாநகராட்சிக்கு மாதம் ரூ.3 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை வருவாய் கிடைக்கிறது" என்று தினேஷ் குமார் கூறினார்.