புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார் மயமாகவுள்ளது உறுதியாகிவருகிறது. புதுச்சேரி வந்த உள்துறைச் செயலர் அறிவுறுத்தல்படி மின்துறை தனியார்மய பலன்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடும் சூழல் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாவதற்கு கடும் எதிர்ப்புகிளம்பியது. மின்துறை ஊழியர்கள் இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். இண்டியா கூட்டணிக்கட்சிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தி பந்த் போராட்டமும் நடத்தினர்.
இச்சூழலில் மத்தியஉள்துறைச் செயலர் கோவிந்த்மோகன், புதுச்சேரிக்கு அரசுமுறை பயணமாக வந்தார். புதுச்சேரியில் செயல்படுத்தபடும் மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிதலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலர், அரசு செயலர்களுடன் ஆலோசித்தார். இதில்முக்கியமாக, மின்துறை தனியார்மயம் பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
புதுச்சேரி வந்த உள்துறைச் செயலர், மின்துறை அதிகாரிகளுக்கு பல கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், மின்சாரத்தின் தரம்மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக நுகர்வோருக்கு தெரிய வேண்டும். மின்துறை தனியார்மயமாக்கலின்போது ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்.
டெல்லியில் நீண்ட காலத்துக்கு முன்பே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன தரப்பு மின்துறையில் நுழைந்த பிறகு நுகர்வோர் அதிக அளவில் பலன்களை அனுபவித்து வருகின்றனர். மின்துறை தனியார்மயம் தொடர்பாக அனைத்து தரவுகளையும் அறிந்துகொள்ள வேண்டும் எனகுறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின் றனர்.
புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என்றுநாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.ஆனால் அப்படி செய்ய முடியாது. தனியாரிடத்தில் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்துறை உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது, "தனியார்மயம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மத்திய அரசு இவ்வழக்கு விவரங்களை கோரியுள்ளது. புதுச்சேரி வந்த மத்திய உள்துறைசெயலரும் இதுபற்றி விசாரித்தார்.தற்போது நூறு சதவீதமும் தனியார்மயமாகவில்லை. 51 சதவீதம்பங்குகள் மட்டும் தனியார்மயமாகும். மின்துறை சொத்து மதிப்பு ரூ. 1,030 கோடி. அதில் தேய்மானம் போக நிகர மதிப்பு ரூ. 551கோடி. மின்துறையின் நிலம், இடங்கள் தனியாரிடம் விற்கப்படாது. ஆனால் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதற்கு வாடகையும் அரசு வசூலிக்கும். மின்துறையின் அசையும் சொத்துகள், திட்டம், பராமரிப்பு மற்றும் விநியோக பணிகள் ஆகியவை மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். வீடுகளுக்கான மானியம், விவசாயமானியம் தொடரும் " என்று குறிப்பிட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "அரசிடம் இருக்கும்போதே தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். கடும் எதிர்ப்பால் மானியம் தருவதாக குறிப்பிட்டனர். யூனிட் கட்டணம் மட்டும் இங்கு வசூலிக்கவில்லை. நிரந்தர சேவைக்கட்டணம் மற்றும் கூடுதல் வரி என மறைமுக கட்டணம் சேர்த்தால் தமிழகத்தை விட கூடுதலாக கட்டணம் இங்கு வசூலிக்கப்படுகிறது.
இந்த மாதம் மின் கட்டணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் 272 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் 1,132 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்திலோ 272 யூனிட்டுக்கு ரூ.602 தான் கட்டணம். இதற்கு அதிகாரிகள் சரியான பதில் தருவதில்லை" என்றனர்.
இந்நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்கட்டணம் உயர்வு, மின்துறை தனியார்மயம் தொடர்பாக விரைவில் விரிவான விளக்கத்தை தரவுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்களில் தெரிவித்தனர்.