வெப்ப அலை தாக்கம் சார்ந்த 5-ல் ஓர் உயிரிழப்பு இந்தியாவில் நிகழ்வதாக அதிர்ச்சி ரிப்போர்ட்


கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் வெப்ப அலை தாக்கத்தால் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 5-ல் ஒன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என்ற அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உலகளவில் வெப்ப அலை சார்ந்து 1.53 லட்ச உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றில் 5-ல் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என 1990 முதல் எடுக்கப்பட்ட கணக்கை சுட்டிக்காட்டி அந்த ஆய்வறிகை அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து சீனா, ரஷ்யாவில் வெப்ப அலைகள் தாக்கம் சார்ந்த உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன என்றும் அது தெரிவிக்கின்றது. அதன்படி, சீனாவில் 14 சதவீதமும், ரஷ்யாவில் 8 சதவீதமும் வெப்ப அலை தாக்கம் சார்ந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்த 30 ஆண்டு கால இடைவெளியில் பதிவாகியுள்ள புள்ளிவிவரங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் உலகளாவில் கோடை காலங்களில் நிகழும் வெப்ப அலை தாக்கம் சார்ந்த அதிகப்படியான உயிரிழப்புகளில், பாதிக்கு நிகரான அளவு மரணங்கள் ஆசியாவில் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பாவில் 30 சதவீத உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதேபோல், வறண்ட வானிலை கொண்ட பகுதிகள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மத்தியில் வெப்ப அலை சார்ந்த உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாகவும், ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 1990 முதல் 2019 வரை வெப்ப அலை தாக்கம் சார்ந்த உயிரிழப்புகள் 1,53,078 ஆக பதிவாகியுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் ஆகும்.

இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை மையமாகக் கொண்ட எம்சிசி மையத்தின் தரவுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த மையம் 43 நாடுகளில் 750 இடங்களில் அன்றாட வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த உயிரிழப்புகளை பதிவு செய்துவந்தது.

ஒப்பீட்டு அளவில் 1999-ல் இருந்ததைவிட 2019-ல் இருந்து ஆண்டுதோறும் வெப்ப அலை காலம் சராசரியாக 13.4 நாட்கள் முதல் 13.7 நாட்களை வரை அதிகரித்துள்ளது. இது சர்வதேச சராசரி. வெப்ப அலை நாட்கள் அதிகரிப்பால் ஒவ்வொரு 10 ஆண்டிலும் 0.35 டிகிரி செல்சியஸ் அளவில் சுற்றுப்புற சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகள் உலகளவில் அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், சுகாதாரத்துறையை மேம்படுத்தி தகவமைப்பது அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் நிமித்தமாக உலக நாடுகள் கூட்டு நடவடிக்கைக்கு முயல வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர். இதனால் வெப்ப அலைகளால் ஏற்படும் உடனடி உடல் உபாதைகளைக் கையாள இயல்வதோடு, நீண்ட கால உத்திகளையும் வகுக்க முடியும் எனக் கூறுகின்றனர். உலகம் முழுவதும் வெப்ப அலை தாக்கங்களால் ஏற்படும் உயிரிழப்புகளில், சில பகுதிகள் மட்டும் கடுமையாக பாதிக்கப்படுவதும் இந்த கூட்டு நடவடிக்கை முயற்சியால் குறைக்கப்படும் என்று கூறுகின்றனர்.

உலகளாவிய கூட்டு நடவடிக்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது, வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுப்பது, நகர கட்டமைப்புகளில் பசுமையைப் புகுத்துவது, சமூக ஒத்துழைப்பு திட்டங்களை வகுப்பது, பொதுச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, கல்வி நிலையங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியனவற்றை பின்பற்றலாம் என இந்த ஆய்வறிக்கை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

x