கவுதம் அதானி தனது அதானி குழுமத்தின் அடுத்த சுற்று பாய்ச்சலுக்காக, பல்வேறு தொழில்துறைகளில் ரூ7 லட்சம் கோடிகளை முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.
3 வட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அடைந்த அண்மை வெற்றிகள், மூன்றாம் முறையாகவும் நாட்டின் பிரதமராக மோடியே வருவார் என்று முரசறைந்து அறிவித்திருக்கின்றன. மோடியின் அரவணைப்பும், ஆசிர்வாதமும் வாய்க்கப்பெற்ற அதானியும், இதனால் உற்சாகத்தோடு புதிய முதலீடுகள் மற்றும் திட்டங்களுடன் தனது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிறார். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடையே அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை முடிவுகளால், அதானி குழுமம் திடீர் சரிவுக்கு ஆளானது. பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை பலவகையிலும் சரிசெய்து மீண்டெழுந்தது. பங்குச்சந்தையில் வீழ்ச்சி கண்ட அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் புதிய எழுச்சி கண்டதோடு வரலாற்று சாதனைகள் படைத்தன. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் விட்ட இடத்தை நோக்கி அதானி முன்னேறி வருகிறார். அதே வேகத்தில் புதிய முதலீடுகளையும் அவர் அறிவித்து உள்ளார்.
கடந்த சில தினங்களாக தனது குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் புதிய விரிவாக்கம், வளர்ச்சி, முதலீடு குறித்து நேரடியாக அதானி அறிவித்து வருகிறார். இது தவிர்த்து பங்குச்சந்தைக்கான அறிவிக்கைகள் வாயிலாகவும் அதான் நிறுவனங்கள் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து அறியக் கிடைக்கின்றன. குறிப்பாக அதானியின் துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம், எனர்ஜி சொல்யூசன்ஸ் உள்ளிட்டவற்றில் பசுமை திட்டங்களின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை அதானி முதலீடு செய்ய இருக்கிறது.
இந்தியாவின் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் நலம் நாடும் வகையிலும் அதானியின் புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும்பட்சத்தில் இந்த வேகம் இன்னும் கூடக்கூடும்.
இதையும் வாசிக்கலாமே...