மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே கட்டி முடித்த பல்லடுக்கு வாகன காப்பகம், வணிக வளாகம் கடைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இதனால், ரூ.6 லட்சம் வீதம் ரூ.3.30 கோடி டெபாசிட் தொகை செலுத்தியும் கடைகள் வழங்காததால் மீனாட்சியம்மன் கோயில் வியாபாரிகள் வறுமையில் வாடுகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுர வாசலில் கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபத்தில் தொன்மையான 70 தூண்கள் சேதமடைந்தன. கோவிலில் 4 கோபுர வாசல்கள் உள்ளன. இதில் தெற்கு, கிழக்கு கோபுர வாசல் பக்கம்தான் பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் அம்மன் சன்னதி, சாமி சன்னதியில் 115 கடைகள் இருந்தன. இதுதவிர வடக்கு வாசல், தெற்கு வாசல், மேற்கு வாசல் பகுதியில் சில கடைகள் இருந்தன.
இந்த கடைகளில் மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற மங்களப்பொருட்கள், பூஜைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், பூக்கடைகள், புத்தகக்கடைகள் இருந்தன. தீப்பிடித்த தூண்களை சீரமைப்பதற்காக தற்காலிகமாக கிழக்கு வாசல் பகுதியில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டன. அதன்பிறகு கோயில் பாதுகாப்பு கருதி நிரந்தரமாகவே மீனாட்சிம்மன் கோயில் வளாகத்தில் இருந்த அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டன. அதற்கு வியாபாரிகள் போராட்டம் நடத்தியதோடு நியாயம் கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
மதுரை மாநகராட்சி ஆணையாளராக அனீஸ் சேகர் இருந்தபோது, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மீீனாட்சியம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட்ட இடத்தில் கட்டும் பல்லடுக்கு வாகன காப்பக வணிக வளாகத்தில் கட்டும் கடைகளை ஒதுக்கி தருவதாக உறுதியளித்திருந்தார். வாகன காப்பக வணிக வளாகத்தில் மொத்தம் 125க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இதில் மீனாட்சியம்மன் கோயில் வியாபாரிகளுக்கு 55 கடைகளை ஒதுக்கி உள்ளார்கள். ஆனால், பல்லடுக்கு வாகன காப்பகம் வணிக வளாகம் கடைகள் கட்டி முடித்து ஒராண்டாகியும் ஆளும்கட்சியினரின் அரசியல் தலையீட்டால் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிதிநெருக்கடியில் இருக்கும் மாநகராட்சிக்கு இந்த கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்காமல் இருப்பதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயில் கடை வியாபாரிகள் கூறுகையில், ‘‘மன்னர்கள் காலம் முதலே கோயில்கள் ஆன்மீக தலமாகவும் சிறிய வாணிப தளமாகவும் செயல்பட்டு வந்துள்ளன. எந்த கோயிலை எடுத்துக் கொண்டாலும் பூஜை பொருட்கள் விற்பார்கள். அந்த கோயில் மூலம் மக்களும், அந்த ஊரும் வளர்ச்சியடையும். அந்த அடிப்படையிலே மீனாட்சிம்மன் கோயிலில் கடைகள் செயல்பட்டன.
மாற்று கடைகள் தருவதாக கூறியதின் அடிப்படையில் கடைகளை காலி செய்து கொடுத்து மாநகராட்சி உறுதியளித்தபடி பல்லடுக்கு வாகன காப்பகத்தில் கடைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். கடைசியாக மீனாட்சியம்மன் கோயில் கடைகளுக்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், இந்த கடைகளை பெற மாநகராட்சி நிர்ணயித்த ரூ.6 லட்சம் டெப்பாசிட் தொகை, மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கும் ஒப்பு கொண்டோம்.
டெபாசிட் தொகையை டிடி எடுத்து கொடுத்துவிட்டோம். 115 வியாபாரிகளில் 55 பேர் மட்டுமே பணம் செலுத்தி உள்ளோம். இவ்வளவு வாடகை கட்டி பிழைக்க முடியுமா? என்பது தெரியவில்லை. மற்றவர்கள் மாநகராட்சி நிர்ணயித்த இந்த தொகையை செலுத்த முடியவில்லை. ஆனால், பணம் கட்டியவர்களுக்கு தற்போது வரை மாநகராட்சி கடை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அதிகாரிகளிடம் கேட்கும் போதும் கட்டிடம் முடியவில்லை என்கின்றனர். கட்டி முடித்து ஒராண்டாகிவிட்டது. ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கப்பார்க்கிறார்கள். இந்த கடைகளை மாநகராட்சி ஒதுக்கி நடத்த அனுமதித்திருந்தால் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருக்கும். அப்படியிருந்தும் மாநகராட்சி மனம் வியாபாரிகளுக்கு இறங்காமல் கல்லாக இருப்பதின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிகிறது’’ என்றனர்.