அவிநாசி சாலை அண்ணா மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய திட்டம்


பழமை வாய்ந்த கோவை அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அவிநாசி சாலை, அண்ணா மேம்பாலத்தின் ஒரு பகுதியை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை யினர் திட்டமிட்டுள்ளனர். கோவை அவிநாசி சாலை, உப்பிலிபாளையத்தில் உள்ள அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அவிநாசி சாலையிலிருந்து கூட்ஷெட் சாலை, மில் சாலை, புரூக் பாண்ட் சாலை (கிருஷ்ணசாமி சாலை) ஆகியவற்றை இணைக்கும் வகையில் இம்மேம்பாலம் உள்ளது.

அதாவது, உக்கடம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், அவிநாசி சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலைக்கு செல்வதற்கும் இம்மேம்பாலம் முக்கிய வழித்தடமாக உள்ளது.

தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இம்மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. வழக்கமாக மழை பெய்யும் சமயங்களில் இம்மேம்பாலத்தின் கீழ்புற வழித்தடங்களில் மழைநீர் தேங்கி விடுவதால் வாகனங்கள் செல்ல முடியாது.

அச்சமயங்களில் மேம்பாலத் தின் மேல்புற வழித்தடத்தில் அனைத்து வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘அண்ணா மேம்பாலத்தில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலத்தின் நான்கு பகுதிகளில் உள்ள வளைவு பகுதிகளையும் அகலப்படுத்த வேண்டும். இதற்கான இடம் அங்குள்ளது. அதேபோல், மேம்பாலத்தின் மையப்பகுதி ரவுண்டானா அளவை குறைத்து, வாகனங்கள் செல்லும் வழித்தடத்தை அகலப்படுத்தலாம்’’ என்றார்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்புப் பிரிவு கோட்டப் பொறியாளர் மனுநீதி கூறும்போது, ‘‘அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்தோம்.

உப்பிலிபாளையத்தில் இருந்து மேம்பாலத்தின் மீது ஏறி வரும் வாகன ஓட்டிகள், ரவுண்டானாவை அடைந்ததும் சற்று இடதுபுறம் திரும்பி சில அடி முன்னே சென்று, மீண்டும் இடதுபுறம் திரும்பி கூட்ஷெட் சாலைக்கோ, வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டிய பகுதிகளுக்கோ செல்கின்றனர்.

அதேபோல், புரூக்பாண்ட் சாலையில் இருந்து மேம்பால ஏறுதளத்தின் வழியாக வரும் வாகன ஓட்டிகளும் இடதுபுறம் திரும்பி சில அடி சென்று மீண்டும் இடதுபுறம் திரும்பியோ அல்லது வலதுபுறம் ஏறியோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். இங்கு கனரக வாகனங்கள் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதைத் தடுக்க இப்பகுதியில் இரு தூண்கள் அமைத்து 20 மீட்டர் நீீளம், 5 மீட்டர் அகலத்துக்கு மேம்பாலத்தை விரிவுபடுத்தினால் இந்நெரிசலை தவிர்க்கலாம். திட்ட மதிப்பும் ரூ.80 லட்சத்துக்குள் தான் வரும்.

இதற்கு இடம் கையகப்படுத்த வேண்டியதில்லை. நெடுஞ்சாலைத் துறையின் இடமே உள்ளது. இந்த அறிக்கையை சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, ‘‘சாலை பாதுகாப்புக்குழுவினர் வலியுறுத்திய மேம்பால விரிவாக்கம் தொடர்பான அறிக்கை, ஒப்புதலுக்காக புதுடெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட் டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், தேசிய நெடுஞ் சாலைத்துறையின் சார்பில் மதிப்பீடு தயாரித்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கி முடிக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, ‘‘மேம்பால விரிவாக்கம் தொடர்பான திட்டப்பணியை உரிய காலக் கெடுவுக்குள் செய்துவிடுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் மாதம்வரை அவகாசம் அளித்துள்ளோம்.

அதற்குள் திட்டப்பணி தொடர்பான நடவடிக் கையைத் தொடங்காவிட்டால், தடையில்லா சான்று பெற்று, சிறப்புத்திட்டம் மூலம் மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாகவே பணி மேற்கொள்ளப்படும் என தேசிய நெடுஞ் சாலைத் துறையினரிடம் தெரிவித் துள்ளோம்’’ என்றார்.