தீபாவளிக்குள் திறக்கப்படுமா புதுச்சேரி ரேஷன் கடைகள்?


தவளக்குப்பம் அருகே நாணமேட்டில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடை. | கோப்பு படம்

‘சட்டப்பேரவையில் அறிவித்தப்படி, மீண்டும் ரேஷன் கடைகளை திறப்பது எப்போது?’ என்ற கேள்வி புதுச்சேரி மக்களிடம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி (தரமான, வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள வெள்ளை நிற அரிசி) வழங்கப்பட்டு வந்தது.

மேலும் ரேஷன் கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவச சர்க்கரை, பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. இத்துடன், ரேஷன் கடைகளில் கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த நாராயணசாமி - அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அரசு நிர்வாகத்தின் பல்வேறு விஷயங்களில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டார்.

அப்போது, இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்ற திட்டத்தை கிரண்பேடி கொண்டு வந்தார். அதன்படி, ரேஷன் கார்டு தாரர்ளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில், அரிசிக்கான பணத்தை வழங்க உத்தரவிட்டார். இதன்படி சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,200, மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.600 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதிலும், சில மாதங்கள் தொய்வு ஏற்பட்டு, அது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நேரடி பணம் வழங்கும் முறையை எதிர்த்து நாராயணசாமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாநில அரசு நிதியில் வழங்கப்படும் இலவச அரிசியை தடுக்கக்கூடாது என வழக்கில் குறிப்பிட்டிருந்தார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய உள்துறைக்குத்தான் இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மேல்முறையீடு வழக்கிலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக கடந்த 7 ஆண்டுகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இடையில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று, என்,ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. ஆனாலும், ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசியோடு, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகளால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை மூடப்பட்டதன் தாக்கம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. பிரச்சாரத்துக்கு சென்ற முதல்வர் ரங்கசாமியிடம், பணத்துக்கு பதிலாக அரிசியை வழங்கும்படி பெண்கள் வலியுறுத்தினர்.

அப்போது அவர், “மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும்” என உறுதியளித்தார். இருப்பினும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது. இதையடுத்து நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், “ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, இலவச அரிசி வழங்கப்படும்” என்று முதல்வரால் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதமே ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

இதுபற்றி பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, " புதுச்சேரி அரசை மீறி, மத்திய உள்துறை அனுமதி பெற்றுதான் பயனாளிகளுக்கு பணம் தரும் திட்டத்தை அப்போதைய ஆளுநர் கிரண்பேடி கொண்டு வந்தார். மீண்டும் ரேஷனில் அரிசி தர அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். உள்துறை அனுமதி அளித்தால் மட்டுமே மீண்டும் இலவச அரிசி வழங்க முடியும். முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை நாடி இதற்கான அனுமதியை பெற வேண்டும்" என்று தெரிவிக்கிறார்.

இதுபற்றி குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகனிடம் கேட்டதற்கு, "கடந்த கால அரசில் நடந்த குழப்பங்களை சரி செய்து வருகிறோம். அரிசி கொள்முதலுக்கு விரைவில் டெண்டர் விடப்படும். ரேஷனில் அரிசி வழங்க அனைத்து பணிகளும் மும்முரமாக நடக்கிறது. குறிப்பாக ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கும் பணிகள் நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி குறிப்பிடுவது போல், ரேஷன் கடைகளை மீண்டும் திறப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை" என்கிறார்.

ரேஷன் கடை திறப்பு தொடர்பாக சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் கூறுகையில், "டெண்டரை குறுகிய காலத்தில், அதாவது 15 நாட்களுக்குள் விடும் நடவடிக்கையை முதல்வரும், ஆளுநரும் எடுத்துள்ளனர். தீபாவளிக்கு முன்னதாகவே ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு விடும். அரிசி தரும் பைகள் தயாராகி விட்டன. ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டம் இது.

ஆளுநரும், முதல்வரும் தற்போது ஒருமித்த கருத்தில் இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தற்போது இந்த விவகாரத்தை அனுப்பத் தேவையில்லை. ரேஷன் மூலம் இலவச அரிசி மட்டுமின்றி பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவும் அனைத்து பணிகளும் நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

தற்போது அரிசி வழங்க நிதித் துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக குடிமைப் பொருள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x