210 மாணவர்களுக்கு மொத்தமே 6 பேராசிரியர்கள்தான் - தாளவாடி அரசு கல்லூரியின் அவலம்


தாளவாடி அரசு கல்லூரி வளாகம்

ஈரோடு: தாளவாடி அரசு கல்லூரியில் 17 பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளதால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பி.காம் மற்றும் பிஎஸ்சி கணித வகுப்புகள், கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் இல்லாமல் நடந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி, தமிழக – கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. தாளவாடி வட்டத்தில் உள்ள 10 ஊராட்சிகளில், 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டுமானால் 80 கி.மீ. தொலைவில் உள்ள சத்தியமங்கலம் அல்லது கோபி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே, தாளவாடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனடிப்படையில், தாளவாடியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார்.இந்த உத்தரவு அடுத்த ஆண்டே செயல்பாட்டுக்கு வந்தது.

தாளவாடி அருகே உள்ள திகினாரை அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 5 வகுப்பறைகளில், தாளவாடி அரசு கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்தது. பி.ஏ. தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், பி.காம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுடன் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, தாளவாடியை அடுத்த பாரதிபுரம் கிராமத்தில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரி இங்கு செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால் கல்லூரியின் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்களின் எதிர்காலம் புதிராக மாறியுள்ளது.

தாளவாடி அரசு கல்லூரியில் தற்போது 210 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த கல்லூரிக்கு கல்லூரி முதல்வர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் உட்பட மொத்தம் 17 பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல ஆசிரியர் அல்லாத பணிகளுக்காக 17 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில், தற்போது ஒரு நிரந்தர பேராசிரியர், 2 கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 3 பேராசிரியர்கள் மாற்றுப்பணி என மொத்தம் 6 பேர் மட்டும் கற்பித்தல் பணியில் உள்ளனர். கல்லூரி முதல்வர் பணியிடம் நிரப்பப்படாத நிலையில் கோவை அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மாற்றுப்பணியில், பொறுப்பு முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.

ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு 17 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு தட்டச்சர் பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டுள்ளது. கல்லூரியில் இரவு காவலர், அலுவலக உதவியாளர், தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட எந்த பணியிடமும் நிரப்பப்படவில்லை.

கல்லூரியை நிர்வகிக்க மொத்தம் 34 பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், 210 மாணவ, மாணவியருக்கு கல்வி கற்றுக் கொடுத்து பராமரிக்க மொத்தம் 8 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியர் கூறியதாவது: பேராசிரியர் பணியிடம் நிரப்பப்படாததால் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களாகவே இருந்து வருகிறோம். குறிப்பாக, கணிதம், வணிகவியலுக்கு பாடம் எடுத்து வந்த பேராசிரியர்கள், பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டனர். கடந்த ஓராண்டாக இந்த பாடங்களுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பிகாம் மற்றும் பிஎஸ்சி கணித வகுப்புகளில் படிப்போர், தாங்களாகவே படித்து தேர்வுகளை எழுத வேண்டிய நிலை உள்ளது.

போதிய பேருந்து வசதி இல்லாததால் அபாயகரமான முறையில் படிகளில்
தொங்கிச் செல்லும் தாளவாடி அரசு கல்லூரி மாணவர்கள்.

மாணவர்கள் பேருந்து படிகளில் பயணம்: தாளவாடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பாரதிபுரத்தில் கல்லூரி அமைந்துள்ள நிலையில், மாணவர்கள் வந்து செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில், தாளவாடியில் இருந்து, ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே கல்லூரி வரை இயக்கப்படுகிறது.

200 மாணவர்களும் இந்த பேருந்தை நம்பியே இருக்க வேண்டியிருப்பதால், படிகளில் தொங்கிக் கொண்டு அபாயகரமான முறையில் பயணித்து கல்லூரிக்கு வர வேண்டியுள்ளது. அரசு கல்லூரி அமைந்துள்ள சாலையில் கர்நாடக பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால், தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையை அவர்கள் ஏற்பதில்லை. எனவே, கல்லூரி தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் கூடுதலாக ஒரு பேருந்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைக் கிராம மாணவர்களின் நலன்கருதி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பணியாளர்கள் இல்லாததால் எல்லாமே வீண்: இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துக்குமாரிடம் பேசியபோது, அவர் கூறியதாவது: தாளவாடி அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கல்லூரியை திறப்பதில் தொடங்கி மூடுவது வரை பேராசிரியர்களே அப்பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடியாக கல்லூரி முதல்வர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

இதில், அதிகப்படியான மாணவர்களின் தாய்மொழியாக கன்னடம் உள்ளது. எனவே, அவர்கள் கன்னட மொழியை முதல் மொழியாக தேர்வு செய்துள்ளனர். இதனால், கன்னட ஆசிரியர்களை நியமிக்க வேண்டியதும் அவசியம்.

நூலகர் பணியிடமும் உடனடியாக நிரப்ப வேண்டும். நிரந்தர நூலகர் பணியிடம் நிரப்பப்படாததால், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட புத்தகங்களை மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது.

அதோடு, அரசின் சார்பில் முதல்வர் கோப்பை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் நிலையில், உடற்கல்வி இயக்குநர் பணியிடம் நிரப்பப்படாததால், மாணவர்களை போட்டிக்கு தயார் செய்து அனுப்ப முடியவில்லை. ஆய்வகத்தில் 20 கணினிகள் இருந்தும், அதை பராமரிக்க பணியாளர் நியமிக்கப்படவில்லை.

கல்லூரிக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், யார் வேண்டுமானாலும் நுழையும் நிலை உள்ளது. எனவே, கல் லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தருவதுடன் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தித் தர வேண்டும்.

அதோடு, ஆசிரியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கல்லூரி வரும் வழியில், ராமாபுரம் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மாணவர்கள் நலன் கருதி அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தாளவாடி போன்ற மலைப்பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாக இருந்த நிலையில், கல்லூரி தொடங்கியது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், கற்றலின் அடிப்படைத் தேவையான ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படாமல், மாணவர்களின் உயர்கல்விக் கனவு ஊஞ்சலாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தாளவாடி மலைகிராம மாணவர்களின் உயர்கல்விக் கனவை நினைவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

x