வடமாநிலங்களில் நுகர்வு அதிகரிப்பு: தேங்காய் விலை உயர்வால் கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி


காவேரிப்பட்டணம் அருகே தளிஅள்ளியில் ஏற்றுமதி செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய். (கோப்பு படம்)

கிருஷ்ணகிரி: வடமாநிலங்களில் நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை மட்டுமே நம்பி மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர்கள் என பலரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். தென்னை மரங்களில் பங்குனி மாதம் முதல் ஆடி மாதம் வரை நல்ல மகசூல் இருக்கும். புரட்டாசி முதல் தை மாதம் வரை மகசூல் 30 சதவீதம் வரை குறையும்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் இழப்பை சந்தித்து வந்தனர். இதனால், அதிகளவில் தேங்காய் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு, வடமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும், வரத்து குறைந்துள்ளதாலும் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

3 ஆண்டுக்கு பிறகு அதிகரிப்பு: இதுகுறித்து அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் கென்னடி கூறும்போது, மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை விவசாயிகள் சுமார் 1.50 கோடி தேங்காய்களை அறுவடை செய்கின்றனர்.

கடந்த மே மாதம் தேங்காய் சராசரியாக டன் ரூ.28 ஆயிரம் என விலை போனது. உரிய விலை கிடைக்காமல் தவித்த தென்னை விவசாயிகள், கிடைக்கும் விலைக்கே தேங்காய்களை இருப்பு வைக்காமல், வெளிமாநிலங் களுக்கு ஏற்றுமதி செய்தனர்.

தற்போது, தேங்காய் டன் ரூ.40 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. ஒரு தேங்காய் ரூ.15-க்கு விற்பனையாகிறது. இதற்கு காரணம் வடமாநிலங் களுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு, தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவது, வரத்து குறைந்தது எனக் கூறலாம். எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இதேபோல விலை உயர்ந்து காணப்படும். இதனால் இருப்பு வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் அனைத்தும் உரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தேங்காய் எண்ணெய் ஆலை: 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேங்காய் விலை கணிசமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விலை ஏற்றத்தாழ்வுகளில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற ஒரே வழி, போச்சம்பள்ளியை மையப்படுத்தி அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை தொடங்குவதே நிரந்தர தீர்வாக அமையும், என்றார்.

x