நாய்களுக்கு இரையாகும் ஆடுகள் - தவிக்கும் திருப்பூர் கால்நடை விவசாயிகள்


காங்கயத்தில் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காங்கயம்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக நாய்களால் கால்நடைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இதனால், கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, உரிய இழப்பீடுகூட கிடைக்காமலும், வாழ்வாதாரத்தை இழந்தும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காங்கயம் நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட தொட்டியபட்டியை சேர்ந்தவர் மோகன்குமார். கால்நடை விவசாயி. இவர், பல ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். 70 ஆடுகள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், தெருநாய்கள் கடித்து, பட்டியில் 28 ஆடுகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். மேலும், சில ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில், மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி, காங்கயம் பேருந்து நிலையம் எதிரே ரவுண்டானாவில், உயிரிழந்த ஆடுகளை சாலையில் போட்டு விவசாயிகள் நியாயம் கேட்டனர்.

இதேபோல், மறவம்பாளையம் ஊராட்சிக்கு ட்பட்ட செம்மண்குழி கிராமத்தில், தெரு நாய்கள் துரத்தியதில் 16 ஆடுகள் 40 அடி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தன. இந்நிலையில் காங்கயம் நகரில் தெருநாய்கள் கடித்ததில், ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, விவசாயிகளின் போராட்ட பகுதிக்கு அனைவரும் திரண்டனர். இதையொட்டி காங்கயம் நகரில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆடுகளுக்கு காப்பீடு திட்டத்தை வழங்க வேண்டுமென விவசாயி கள் வலியுறுத்தினர்.

கள்ளச்சாராய உயிரிழப்பு களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் நிலையில், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ஏன் வழங்குவதில்லை என கேள்வி எழுப்புகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நாய்கள் கடித்து ஆடுகள், மாடுகள் உயிரிழப்பது தொடர்கிறது. இதில், கால்நடைகளை இழந்து தவிக்கும் விவசாயிகளில் மோகன்குமாரும் ஒருவர்.

வழிவகை ஏதுமில்லை: இதுதொடர்பாக காங்கயம் நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "நகராட்சி மூலம் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அறுவைக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கூடம், அடுத்த 15 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களை பிடித்து கருத்தடை, அறுவை சிகிச்சை மற்றும் வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு நகராட்சி மூலமாக இழப்பீடு வழங்க வழிவகை ஏதுமில்லை. இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள 2 நாட்களுக்குள் குழு அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

10 ஆயிரம் கருத்தடை ஊசி: திருப்பூர் மாநகரில் தெருநாய்கள் பிரச்சினை நீடிப்பதால், மாநகராட்சி கூட்டங் களில் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். முதல் கட்டமாக 10 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

வார்டுக்கு 2 நாட்கள் வீதம், இந்த பணி ஒதுக்கப்படுகிறது. இந்த கருத்தடை தடுப்பூசிகள் வந்ததும், தனியார் அமைப்பின் உதவியுடன் மாநகராட்சியுடன் இணைந்து தெருநாய்களுக்கு செலுத்தப்படும். ஒரு நாய்க்கு தடுப்பூசி செலுத்த ரூ.55 முதல் ரூ.60 வரை செலவிடப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதால், ரேபிஸ் நோய் தொற்று ஏற்படாது.

2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநகராட்சி பகுதியில் 6 ஆயிரத்து 900 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. தற்போது சுமார் 15 ஆயிரம் தெருநாய்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாய்களின் இனப்பெருக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மக்கள்.

x