கலைஞர் கனவு இல்லத் திட்டத்துக்கு கூடும் மவுசு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவியும் விண்ணப்பங்கள்!


‘குடிசையில்லா வீடு’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் வீடு கட்டும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பட்டா இடத்தில் குடிசை வீட்டில் வசித்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதில் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக ரூ. 1.20 லட்சம், மாநில அரசின் பங்காக ரூ.1.20 லட்சம் என மொத்தம் 2.40 லட்சம் அளிக்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு 269 சதுர அடியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ளலாம். இதில் பலர் பயன் அடைந்திருந்தாலும், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

வீடு கட்டும் பயனாளிகளில் சிலர் அடிக்கல் நாட்டுவதோடு நிறுத்தி விடுகின்றனர். வீடு கட்டும் பணிகள் படிப்படியாக நடக்க நடக்க, இதற்கான செலவினத் தொகை அரசால் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், தங்களது பங்களிப்பை பயனாளிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால், பல இடங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் பாதியிலேயே நிற்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசு ‘கலைஞர் கனவு இல்லம்’ என்னும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின்படி, ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் 360 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ளலாம். அரசே நிர்ணயித்த 4 வகை வீடுகளில், ஏதேனும் ஒன்றை கட்டிக்கொள்ள அனுமதி வழங்குகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு என்னென்ன நிபந்தனைகளோ, அதே நிபந்தைனைகள்தான் கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கான மதிப்பீட்டுத் தொகை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தைக் காட்டிலும் ரு.1 லட்சத்து 10 ஆயிரம் அதிகம் என்பதால், ஊராட்சிகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தைக் காட்டிலும் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடப்பாண்டில் 3,500 பயனாளிகள் கலைஞர் வீடு கட்டும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தற்போது பயனாளிகளிடம் இருந்து கூடுதல் விண்ணப்பங்கள் வரும் நிலையில், அதன் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பேசிய போது, “பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொய்வு உள்ளது உண்மைதான். முதலில் ஆர்வம் செலுத்துபவர்கள், பின்னர் வீட்டை கட்டி முடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு 3,613 பயனாளிகளைத் தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், கிராமப்புற மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை. மாறாக கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டவே விண்ணப்பம் அளிக்கின்றனர்” என்று தெரிவிக்கிறார். திட்டங்கள் எது என்பதைத் தாண்டி, அதில் தரப்படும் தொகையைக் கொண்டே மக்கள் அதில் ஆர்வம் செலுத்துகின்றனர் என்பதே இதன்மூலம் தெளிவாகிறது என்று இதுபற்றி விஷயமறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

x