உதகை: பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த நீலகிரி மாவட்ட ஆவின் நிறுவனம் அதிலிருந்து மீண்டு லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் சுமார் 12 ஏக்கரில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை, 1985-ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் திறந்துவைத்தார். லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், கடன் சுமையால் காலப்போக்கில் நஷ்டத்தை சந்தித்தது.
அதிலிருந்து மீள முடியாததால், 350 நிரந்தர ஊழியர்களுடன் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில், தற்போது 50 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக 39 பேர்பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களின் ஊதியத்துக்கே வருவாய் கிடைக்காத நிலையில், ஆவின் நிறுவனம் நலிவடைந்தது.
இந்நிலையில், நிறுவனத்தை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. தேவையில்லாத செலவுகள் குறைப்பு, மின் சிக்கனம் மற்றும் விற்பனையை அதிகரித்ததால், கடந்த 6 மாதங்களாக படிப்படியாக ஆவின் நிறுவனம் லாபத்தை பார்த்து வருகிறது. இந்த மாதம் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆவின் நிறுவன பொதுமேலாளர் ஜெயராமன் கூறும்போது, ‘‘நீலகிரி ஆவின் நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். தினமும் 25 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில், பால் வழங்கும் 2510 உறுப்பினர்களிடமிருந்து நாளொன்றுக்கு 11 ஆயிரத்து 600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதம் தேவைப்படும் பால், கோவை ஒன்றியத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 20 ஆயிரத்து 800 லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 6000 லிட்டர் பாலில் உப பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நஷ்டத்தில் இயங்கியதால் ஆவின் கட்டிடமே பொலிவிழந்து காணப்பட்டது. ஊழியர்கள் அனைவரின் பங்களிப்புடன் ரூ.2.5 லட்சம் செலவில் கட்டிடத்துக்கு வர்ணம் பூசப்பட்டது. விற்பனையை அதிகரிக்க விற்பனை மேலாளர் நியமிக்கப்பட்டார். மேலும், பால் முகவர் மற்றும் விற்பனையகங்கள் முறைப்படுத்தப்பட்டன. டிஜிட்டல் வர்த்தகத்துக்காக க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தியதால் விற்பனை அதிகரித்தது.
மேலும், கோவையிலிருந்து ஒரு லிட்டர் பால் ரூ.70க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பூரிலிருந்து பால் கொள்முதல் செய்து, அதை கோவைக்கு அனுப்பி பிராசஸ் செய்யப்பட்டதால், ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை ரூ.40-ஆக குறைந்தது. இதனால், கொள்முதல் செலவும் குறைந்து, நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனம் மெல்ல மீண்டு லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக லாபம் பெற்று வருகிறது. இதன் மூலமாக, ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை பணப் பலன்களில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் நாளொன்றுக்கு ரூ.240-லிருந்து ரூ.429-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
புதிய கட்டிடத்தால் கடன் சுமை: லாபத்தை ஈட்டி வந்த ஆவின் நிறுவனம், 1985-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.4 கோடியில் புதிய வளாகத்துக்கு மாறியது. அந்த நிதி வட்டியுடன் சேர்ந்து ரூ.20 கோடி ஆகிவிட்டதால், மீள முடியாத கடன் சுமையில் ஆவின் சிக்கியது. தற்போது மூலதன கடனில் பெரும் பகுதி அடைக்கப்பட்டுவிட்டதால், வட்டியை தள்ளுபடி செய்ய அரசுக்கு ஆவின் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தால், ஆவின் நிறுவனம் நஷ்டத்திலிருந்து மீண்டுவிடும்.