சாட்ஜிபிடி சரிதம்- 23; ஏஐ களைப்புக்கு தீர்வு என்ன?


ஏஐ பிதற்றல் (AI Hallucination)

சாட்ஜிபிடி செயல்பாடு அளிக்கும் ஏமாற்றம் தொடர்பான குரல்கள் கேட்கத்துவங்கியிருப்பதையும், அதற்கான காரணங்களையும் பார்த்தோம். சாட்ஜிபிடி என்றில்லை, பொதுவாக ஏஐ நுட்பம் தொடர்பாகவே பலரும் ஒருவித ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிகிறது. ஏஐ தொடர்பான இந்த ஏமாற்றத்தை, ஏஐ களைப்பு (AI fatigue) என்றும் குறிப்பிடத்துவங்கியுள்ளனர்.

சாட்ஜிபிடியின் வெற்றிகரமான அறிமுகத்தை அடுத்து எங்கு பார்த்தாலும், ஏஐ அற்புதங்கள் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடிரென எதிர்குரல்கள் கேடக்கத் துவங்கியிருப்பது ஏன் எனும் குழப்பம் ஏற்படலாம். இப்படி எந்த துறையை எடுத்தாலும் ஏஐ பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் பேசத்துவங்கியிருப்பது தான் இந்த களைப்பிற்கு காரணம் என்கின்றனர்.

ஏஐ களைப்பு

ஒரு பக்கம் ஏஐ நுட்பங்களின் தொடர் அறிமுகங்களால் ஒருவித மிதமிஞ்சிய உணர்வு ஏற்பட்டிருப்பதோடு, இன்னொரு பக்கம் ஏஐ நுட்பங்கள் அவற்றின் எதிர்பார்ப்பிற்கு ஈடு கொடுக்காமல் இருப்பதும், ஏஐ களைப்பிற்கு காரணம் என்கின்றனர்.

ஏஐ களைப்பு பற்றி பலரும் வெளிப்படையாகவே புலம்பத் துவங்கியிருக்கின்றனர். இன்னும் பலர் இது பற்றி அறியாமலே அதன் தாக்கத்தால் திணறிக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் கூட இத்தகைய உணர்வுக்கு உள்ளாகியிருக்கலாம். ஏஐ தொடர்பான விவாதங்களும், கணிப்புகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைகின்றன.

எந்தெந்த துறைகளில் எல்லாம் ஏஐ நுட்பத்தால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படலாம் எனும் கணிப்புகளில் துவங்கி, மனித குலத்தின் எதிர்காலம் மீது ஏஐ தாக்கம் எப்படி இருக்கும் எனும் விவாதம் வரையான தொழில்நுட்ப ஆர்வலர்களைக்கூட, ஏஐ தொடர்பான தகவல்கள் சோர்வுக்கு உள்ளாக்கி வருகின்றன.

ஏஐ

அதே நேரத்தில், ஏஐ அலையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அறிமுகமாகும் புதுப்புது ஏஐ சேவைகள் இன்னும் மிரட்சியை உண்டாக்குவதாக கருதப்படுகிறது. இதன் விளைவாக ஏஐ களைப்பில் இருந்து விடுபடுவது எப்படி என வழிகாட்டும் கட்டுரைகள் கூட வெளியாகத் துவங்கியுள்ளன.

ஏஐ தொடர்பான மிகைத்தன்மை பற்றி எல்லாம் கவலைப்படாமல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படைகளை அறிந்து கொள்வது, ஏஐ செய்தி நுகர்வில் கவனமாக இருப்பது, மற்றவர்களின் ஏஐ அனுபவம் மூலம் புரிதலை பெறுவது போன்ற யோசனைகள் எஐ களைப்பிற்கு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் ஏஐ ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றிய உண்மை நிலவரத்தை புரிந்து கொள்வது, இந்த நுட்பத்தால் நாம் எப்படி பயன்பெறலாம் என சிந்திப்பது ஆகிய வழிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இவைத்தவிர, தற்காலிகமாக ஏஐ செய்திகளில் இருந்து விலகி நிற்பதும் உகந்தது என சொல்லப்படுகிறது.

நிறுவன அதிபர்கள், அதிகாரிகள் மத்தியில் வேறு விதமான பாதிப்பை உணர முடிவதாக சொல்கின்றனர். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ நுட்பங்கள் ஏற்படுத்திய பரபரப்பால், பல நிறுவனங்கள் முழு வீச்சில் ஏஐக்கு மாறியுள்ளன. செலவு குறைப்பை, செயல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல பலன்களை ஏஐ உண்டாக்கும் எனும் நம்பிக்கையில் பல நிறுவனங்கள் ஏஐ நுட்பத்திற்கு மாறின என்றால், ஏஐ முன்னேற்றத்தை தவறவிடக்கூடாது எனும் அச்சத்தில் ஏஐ நுட்பத்தை தழுவிக்கொண்டுள்ளன.

ஏஐ

ஆனால், ஏஐ நுட்பம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை எனும் ஏமாற்றம் பலரிடம் நிலவுகிறது. சில நிறுவனங்களில் இது நிர்வாக தரப்பில் பிளவையும் உண்டாக்கியுள்ளது. சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக வெளியாகி உள்ள தகவலையும் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

ஏஐ தொடர்பான சோர்வு ஏற்பட்டிருப்பது உண்மை என்றாலும், அதற்காக ஏஐ-ன் எதிர்கால தாக்கத்தை புறந்தள்ளிவிட முடியாது. உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக எல்லா துறைகளிலும் ஏஐ பயன்பாட்டிற்கு வரும். இதை தவிர்க்க நினைப்பவர்கள் பின்தங்கிப்போகும் அபாயம் இருக்கிறது. அதற்காக, எல்லாமே ஏஐ மயமாகும் என்று சொல்லப்படுவது மிகைப்படுத்தலாகவே அமையும். இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் தான் ஏஐ பயன்பாடு அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஏஐ

ஏஐ நுட்பத்தை வியப்பாகவோ அல்லது மிரட்சியாகவோ பார்ப்பதற்கு பதிலாக, அதன் நடைமுறை பயன்பாட்டை புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக ஏஐ சாத்தியங்களையும், அதன் எல்லைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். மனித அறிவுக்கு நிகரானதாக ஏஐ சொல்லப்பட்டாலும், உண்மையில், மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய விஷயங்களை செய்து முடிக்கவும், ஒரே மாதிரியான பணிகளை மேற்கொள்ளவும் ஏஐ ஏற்றது என கருதப்படுகிறது. அதோடு, ஏஐ செயல்பாடுகளுக்கு கறாரான விதிமுறைகள் தேவை.

சாட்ஜிபிடி போன்ற ஆக்கத்திறன் ஏஐ நுட்பங்கள், படைப்பூக்கத்தில் மயக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை அடிப்படையில் மனித ஆக்கங்களை நகல் எடுக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும். மனித குலத்தின் அறிவு கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, அதை பலவிதங்களில் பிரதியெடுக்க முற்படுகின்றன. ஆனால் சாட்ஜிபிடி கொண்டு ஒரு சட்ட ஆவணத்தை தயார் செய்ய முடியும் என்றாலும், அதை ஒரு மனித மேலாளர் சரி பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். சாட்ஜிபிடி ஆக்கத்தை அப்படியே நம்ப முடியாது.

ஒருவிதத்தில் இந்த ஏஐ நிதர்சனமே ஏஐ களைப்பை உண்டாக்கி உள்ளதாகவும் புரிந்து கொள்ளலாம். இந்த இடத்தில் ஏஐ துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் களைப்படைதல் தொடர்பான ஆய்வு கவனிக்கத்தக்கதாக அமைகிறது. மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்தே ஒருவர் களைப்பாக இருக்கிறாரா? அல்லது மன அழுத்தம் கொண்டிருக்கிறாரா? என ஏஐ நுட்பமும் மூலம் அறியலாம் என சொல்லப்படுகிறது. மனிதர்கள் மீது பொருத்தப்படும் சென்சார்கள் வாயிலாக சேகரிக்கப்படும் தரவுகள் கொண்டு இந்த நுட்பம் செயல்படுகிறது.

ஏஐ

மனித களைப்பை கண்டறிந்து சொல்லும் ஏஐ நுட்பம் என்பது ஏஐ களைப்பு பற்றி பேசும் போது முரணாக தோன்றினாலும், ஏஐ நுட்பத்தின் சாத்தியங்களை சுட்டிக்காட்டுவதாக இது அமைகிறது. போர் சூழல்களில் ராணுவ வீரர்களை நிர்வகிப்பதில் இந்த நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரசு மட்டத்திலும், ராணுவத்திலும் ஏஐ நுட்பத்தின் பயன்பாடு தீவிரமாக உள்ளது. சொல்லப்போனால் ஏஐ பயன்பாட்டில் பின் தங்கிவிடக்கூடாது என்பதில் நாடுகளிடையே போட்டியும் நிலவுகிறது. ஏற்கனவே சிட்டிசன் நிறுவனம் கைக்கடிகாரத்தில் இந்த நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.

சென்சார்கள் சார்ந்த பயன்பாடு மருத்துவ துறையில் மட்டும் அல்லாது விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும் தீவிரமாக உள்ளது. இப்போது உண்மையிலேயே உங்களுக்கு ஏஐ களைப்பு உண்டாகியிருக்கலாம் அல்லது அதிகமாகி இருக்கலாம். எனில், இதற்கு தீர்வாக ஏஐ பிதற்றல் (AI Hallucination) பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். அதே போல சாட்ஜிபிடி அற்புதம் எல்லாம் இல்லை, வெறும் மாட்டுச்சாண உருவாக்கும் இந்திரம் (Bullshit Generator) என சொல்லப்படுவதையும் பார்க்கலாம். மொழியியல் அறிஞர்கள் இதை வாய்ப்பிய கிளி(stochastic parrots) என்றும் வர்ணிக்கின்றனர்.

ஏஐ சார்பு தன்மை

இவை எல்லாவற்றையும் விட, ஏஐ நுட்பத்தின் பின்னே மறைந்திருக்கும் ஏஐ சார்பு தன்மை(AI Bias) பற்றி தான் உண்மையில் நாம் கவலைப்பட வேண்டும் என்றும் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை எல்லாம் தொடர்ந்து பார்க்கலாம்.

x