ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அரிய வகை உயிரினங்கள்: கணக்கெடுப்பில் தகவல்


ஸ்பைனி பல்லி

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில், வால்பாறை சரகத்தில் உள்ள கிராஸ் ஹில் (புல்மலை) தேசிய பூங்கா, உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கரியன்சோலைதேசிய பூங்கா ஆகியவற்றில் முதன்முறையாக நீர், நிலம் வாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வால்பாறையில் உள்ள கிராஸ் ஹில் தேசிய பூங்கா 3,122 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 6,600 அடி உயரம் கொண்ட சிகரங்கள் மற்றும் உயரமான பீடபூமிகளை கொண்டது. அதேபோல் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கரியன் சோலை தேசியப்பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 800 அடிக்கும் மேல் அமைந்துள்ள புல்வெளி மலையாகும். மலைச்சரிவுகளுக்கு கீழே பசுமையான மற்றும்இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது.

சூழலியல் முக்கியத்துவம்வாய்ந்த இந்த வாழ்விடங்களில் உள்ள ஊர்வன உயிரினங்களின்பன்முகத்தன்மையை ஆவணப்படுத்த வால்பாறை வனச்சரகஅலுவலர் வெங்கடேஷ் தலைமையில், 6 பேர்கொண்ட குழு கணக்கெடுப்புப்பணி மேற்கொண்டது. இந்த ஆய்வில் 20 வகையான ஊர்வனமற்றும் 34 வகையான ஆம்பிபியன்(நீரிலும் நிலத்திலும் வாழ்பவை) அடையாளம் கண்டுள்ளது. அக்காமலை கிராஸ் ஹில்தேசிய பூங்காவில், இக்குழுவினர் 11 ஊர்வனஇனங்களையும் 12 நீர்வீழ்ச்சி பகுதியில் வாழும் இனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

தாக்கரே பூனை பாம்பு

அதே நேரத்தில் கரியன்சோலை பகுதியில் 9 ஊர்வனஇனங்கள், 22 நீர்வீழ்ச்சி பகுதியில் வாழும் இனங்கள்கண்டறியப்பட்டன. நீர்வீழ்ச்சிகளில் பறக்கும் தவளை, டெக்கான் நைட் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் ஈரமான மலைக் காடுகள். ஆறுகளில் வளரும் தன்மை கொண்டவை. உபெரோடான்மாண்டனஸ் போன்ற உயரமான மைக்ரோஹைலிட்இனங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆனைமலை துணைக் கிளஸ்டரில் மட்டுமே காணப்படும் அழிந்து வரும் குளிர் நீரோடை டாரண்ட் தவளை ஆகியவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பறக்கும் தவளை

கிராஸ் ஹில் தேசிய பூங்காவில் பார்கிஸ், மிக உயரமானமலைப்பகுதி புல்வெளிகளின் சின்னமாக கருதப்படும்மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள ரெஸ்ப்ளெண்டன்ட் ஷ்ரப்ஃப்ராக் தவளை இனம் கண்டறியப்பட்டது. வால்பாறை மற்றும் டாப் சிலிப்பில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் நட்சத்திரக் கண்கள் கொண்ட காட் தவளை, அழிந்து வரும் பச்சை கண் புஷ் தவளை, கொடைக்கானல் புஷ் தவளை, மஞ்சள் வயிற்று புஷ் தவளை மற்றும் காலில்லாத ஆம்பிபியன் வால்பாறை மற்றும் டாப்சிலிப் நீரோடைகளில் பரிணாம வளர்ச்சியின் தனித்துவமான ஊதா தவளை ஆகியன ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்பைனி பல்லி

ஊர்வன இனங்கள்: கிராஸ் ஹில் தேசியப் பூங்காவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஊர்வனவற்றில், அரிய மூன்று கோடுகள் கொண்ட ஷீல்ட் டெயில் என்ற பாம்பு தனித்துவம் மிக்கது. இது 1867-ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து நான்கு முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 2018-ல் மூணாறில் காணப்பட்டது. சினிமாஸ்பிஸ் என்ற பல்லி வகை, டெயிஸ் பாட் ஷீல்டெயில் என்ற பாம்பு வகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெட் ஸ்பாட் ஷீல்ட் டெயில் மற்றும் அரிதானஉயரமான வைன் பாம்பு போன்ற ஊர்வன இனங்களும் கணக்கெடுப்பின்போது காணப்பட்டன.வால்பாறை மற்றும் டாப்சிலிப்பில் உள்ள குறைந்தஉயரம் கொண்ட எலியட்ஸ் வனப்பல்லி முதல்வால்ஸ்வைன் பாம்பு போன்ற உள்ளூர் இனங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின்போது பதிவு செய்யப்பட்ட உயிரினங்களில் 85 % மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுபவை ஆகும். இந்த நீர் நிலம்வாழ் உயிரினங்கள், ஊர்வன ஆனைமலை புலிகள்காப்பகத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும், அதன் தனித்துவமான பல்லுயிரியலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது, என்றனர்.

x