இந்தியாவில் 75 லட்சம் தவறான வாட்ஸ் ஆப் கணக்குகளுக்கு தடை; மெட்டா அறிவிப்பு!


வாட்ஸ் ஆப்

கடந்த 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 லட்சம் தவறான கணக்குகளை வாட்ஸ் ஆப் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள்

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 75 லட்சத்து 48 ஆயிரம் தவறான கணக்குகளை தடை செய்துள்ளது. இவற்றில் 19 லட்சத்து 19 ஆயிரம் கணக்குகளை பயனர்கள் புகார் தெரிவிப்பதற்கு முன்பாகவே தடை செய்துள்ளதாக வாட்ஸ் ஆப், தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 500 மில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்-க்கு கடந்த அக்டோபர் மாதத்தில் 9,063 புகார்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் 12 புகார்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புகாருக்குள்ளான கணக்குகளை முற்றிலுமாக தடை செய்வதற்கு பதிலாக, அவற்றுக்கு மாற்று தீர்வு வழங்கவும், ஏற்கெனவே தடை செய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் தொடங்கவும் என அந்தப் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் பதிலளித்துள்ளது.

குறைகள் மேல்முறையீட்டு குழு (ஜிஏசி)

பயனர்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு விரிவான விளக்கம் தருவது, புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது, முறைகேடுகளை தடுப்பதற்கு ஆக்கபூர்வ வசதி ஆகியவற்றை கொண்டிருப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

இந்திய சமூக வலைதள பயனர்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு குறைகள் மேல்முறையீட்டு குழுவை (ஜிஏசி) சமீபத்தில் அமைத்தது. இந்த குழுவானது மிகப்பெரும் சமூகவலைதளங்களின் முடிவுகளுக்கு எதிரான பயனர்களின் புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்காரணமாக, சமூக வலைதளங்கள் தங்களது பயனர்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உரிய தீர்வை மேற்கொள்வதில் அக்கறை காட்டி வருகின்றன. வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முறைகேடுகளிலிருந்து பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் அம்சம் மற்றும் பொறியாளர்கள் குழு, தகவல் ஆய்வாளர்கள், வல்லுநர்கள், சட்டநிபுணர்கள் உள்ளிட்டோரை பணியமர்த்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x