திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.3 கோடி மதிப்பிலான பால் பாக்கெட்டு தயாரிப்பு அலகு முதல்வரால் தொடங்கப்பட்டு செயல்படாமல் முடங்கியே கிடக்கிறது. மேலும், கரோனா ஊரடங்குக்கு பிறகு வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி ஒரே ஒரு முறைதான் குளிர்தன்மை குறைந்த பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் ஆவின் பால் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பால் ஒன்றியம் கடந்த 2019-ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. ஆவின் நிர்வாக தரவுகளின்படி திருவண் ணாமலை ஒன்றியத்தில் 2.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர் சங்கங்களில் சுமார் 1.75 லட்சம் பேர் பதிவு உறுப்பினர்களாக உள்ள நிலையில் சுமார் 40 ஆயிரம் பேர் ஆவினுக்கு பால் வழங்கி வருகின்றனர்.
அதேபோல், அம்மாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை பிரம்மாண்டமானது என்ப துடன், இங்கு தினசரி 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனும், 20 டன் பால் பவுடர் தயாரிக்கும் திறனும், 9.5 டன் வெண்ணெய் தயாரிப்பு திறனுடன், நெய் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. மேலும், இங்குள்ள கிடங்கில் 500 டன் வெண்ணெய், 1,500 டன் பால் பவுடர் சேமிக்க முடியும். இந்த தொழிற்சாலைக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
டம்மியானது ஒன்றியம்: திருவண்ணாமலை ஆவின் ஒன்றியம் தனியாக பிரிந்து செயல்பட்டாலும் அதிகாரி களின் மெத்தனத்தால் இதுநாள் வரை டம்மியாகவே செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம், ஆவின் பால் பாக்கெட்டுகளுக்காக வேலூர் ஆவின் ஒன்றியத்தையே நம்பி உள்ளனர். திருவண்ணாமலை ஆவின் பால் ஒன்றியத்துக்காக கடந்த 2019-ம் ஆண்டு வேங்கிக்காலில் ரூ.3 கோடி மதிப் பீட்டில் பால் பாக்கெட்டுகள் தயாரிப்பு அலகு தொடங்கப்பட்டது.
அங்கு நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். முதல்வர் திறந்து வைத்த பிறகு இந்த பால் பாக்கெட்டுகள் தயாரிப்பு அலகு செயல்படாமல் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அங்குள்ள இயந்திரங்களின் நிலை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டு தயாரிப்பு அலகு தொடங்கினால் தாங்கள் 3 ஆண்டுகளாக அவதிப்படும் இன்னல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆவின் பால் முகவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பெயர் கூற விரும்பாத பால் முகவர் ஒருவர் கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் லிட்டர் பால் பாக் கெட்டுகள் விற்பனை ஆகின்றன. இதில், திருவண்ணாமலை நகரில் மட்டும் 10 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் பாக்கெட்டுகள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் விநியோகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் விதிவிலக்காக ஒரே முறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் கொண்டுவந்த நடைமுறை இன்னமும் தொடர்கிறது. ஆவினை பொருத்தவரை திருவண்ணா மலை மாவட்டத்துக்கு மட்டும் கரோனா ஊரடங்கு தொடர்கிறது.
அதிலும், வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து எங்களுக்கு வரும் பால் பாக்கெட்டுகள் மைனஸ் 6 அல்லது 7 டிகிரி அளவுக்கு குளிர்தன்மையுடன் இருக்க வேண்டும். திருவண்ணாமலைக்கு மட்டும் மைனஸ் 4 டிகிரி அளவுக்கு தான் வருகிறது. இந்த பாலை நாங்கள் வைத்து இரவு வரை விற்பனை செய்ய முடியவில்லை. குளிர்தன்மை குறைந்து வரும் பால் பாக்கெட்டுகளை மீண்டும் குளிர் சாதன பெட்டியில் வைக்கும்போது பால் உடைந்து தயிராகிவிடுகிறது. மாலை நேரத்தில் ஆவின் பாலை விற்பனை செய்ய முடிய வில்லை.
திருவண்ணாமலையில் 27 ஆவின் பால் முகவர்களை ஆவின் அதிகாரிகள் சுமார் 80 ஆக மாற்றிவிட்டனர். திருவண்ணா மலையில் தெருவுக்கு தெருவாக ஆவின் பால் முகவர்கள் இருந்தாலும் நாங்கள் விற்பனை செய்த அதே அளவுக்குத்தான் பால் விற்பனையாகிறது. அதேநேரம், பால் உப பொருட்கள் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளன.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் இருந்த பால் பாக்கெட் தயாரிப்பு இயந் திரத்தை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வேலூருக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். புதிய பால் பாக்கெட் தயாரிப்பு இயந் திரமும் இயங்கவில்லை. எங்களுக்கு காலை, மாலை என இரண்டு வேளையும் பால் பாக்கெட் விநியோகம் செய்தால் பால் விற்பனை அதிகரிக்கும்’’ என்றார்.
இதுதொடர்பாக திருவண்ணாமலை ஆவின் பொதுமேலாளர் ரங்கநாதனிடம் தொடர்புகொண்டதற்கு, ‘‘நான் முக்கியமான கூட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு பேச முடியாது’’ என தொடர்பை துண்டித்து கொண்டார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளின் குளிர் தன்மை குறைந்து வருவது தொடர்பாக வேலூர் ஆவின் பொதுமேலாளர் இளங் கோவனிடம் கேட்டபோது, ‘‘பால் குளிர் தன்மை குறைந்து அனுப்பப்படுவதாக தகவல் எனக்கு கிடைக்கவில்லை. அவர் களது கோரிக்கையை மனுவாக கொடுத் தால் அதை எப்படி சரி செய்வது என்பதை பார்த்து சரி செய்து கொடுக்கிறேன்’’ என்றார்.