கொப்பரை தேங்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு லாபமில்லை - காரணம் என்ன?


கோப்புப் படம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்தூர், பூதப்பாடி, சத்தியமங்கலம், கொடுமுடி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், உடுமலைப்பேட்டை, பொங்கலூர் உள்ளிட்ட இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், தனியார் மண்டிகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் நடக்கிறது.

இதில் பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும் கொப்பரை ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கொப்பரை விற்பனையாகி வருகிறது. கடந்த 10 நாட்களாக கொப்பரையின் தேவை அதிகரிப்பால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி பெருந்துறை கூட்டுறவு சங்கத்துக்கு 2,966 மூட்டை கொப்பரை மட்டும் வரத்தான நிலையில், முதல்தரம் கிலோ ரூ. 118.10 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் 4,054 மூட்டை கொப்பரை வரத்தானது. ஆனால் தேவை அதிகரித்ததால் அதிகபட்சமாக கிலோ 126.29-க்கு விற்பனையானது. முதல் தரம் குறைந்தபட்சம் 108.89, அதிகபட்சம் ரூ. 126.29, இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ. 73.21, அதிகபட்சம் ரூ.117.89-க்கு விற்பனையானது. மொத்தம் 1.92 லட்சம் கிலோ கொப்பரை ரூ. 2.15 கோடிக்கு விற்பனையானது.

இதுகுறித்து கொடிவேரி பாசனசபைத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை நிலவிய கடுமையான வெயிலால், தேங்காய் உற்பத்தியில் 30 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை உயர்ந்தும், அது விவசாயிகளுக்கு பெரிய வருவாயைக் கொடுக்கவில்லை. பண்டிகைக்காலம் முடியும் வரை தேங்காய் மற்றும் கொப்பரையின் தேவை அதிகரிப்பால் விலை கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து தான் நாடு முழுமைக்குமான தேங்காய் சப்ளை செய்யப்படுகிறது. தேங்காய் நேரடி பயன்பாடு தவிர தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கான கொப்பரை கொள்முதலும் இந்த நான்கு மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில், தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், தேங்காய் எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது.

பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு வியாபாரிகள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கூடுதலாக கொப்பரையை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் சராசரியாக கிலோ ரூ.100 என்ற அளவில் இருந்து வந்த கொப்பரை விலை, நேற்று அதிகபட்சமாக ரூ.126-க்கு விற்பனையாகியுள்ளது, என்றனர்.

x