ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோர பகுதியில் விரைவில் ரூ.15 கோடியில் சுற்றுலா மேம்பாடு


தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கழிமுகப் பகுதி

ராமேசுவரம்: ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ரூ.15 கோடியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. நம் நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய இரண்டு கடல்களால் சூழப்பட்ட தீவு ராமேசுவரம். இத்தீவைச் சுற்றிலும் ஆமை, கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.

ராமேசுவரம் தீவுக்கு அருகேயுள்ள கோரி தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவற்றில் மாங்குரோவ் காடுகள் மற்றும் பல்வேறு வகையான பவளப்பாறைகளும் உள்ளன. இவை பல்லுயிர் பெருக்கத்துக்கு புகழிடமாக இருப்பதால், ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வலசை வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதி சர்வதேச அளவில் ராம்சர் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குருசடை தீவு

இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ராமேசுவரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும், என அறிவித்திருந்தார். அதனடிப்படையில், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கடந்த வாரம் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்திருந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இத்திட்டத்தின் கீழ், ராமேசுவரத்தில் பவளப்பாறை படகு சவாரி, குருசடை தீவு சதுப்பு நிலப் பகுதி, தனுஷ்கோடியில் பறவைகள் கண்காணிப்பு மையம், ஆமைகள் விளக்க மையம், கோதண்டராமர் கோயில் கழிமுகப் பகுதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இவற்றின் மூலம் உள்ளுர் மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்’ என்றனர்.

x