மதுரை மேயர் பதவிக்கு இப்போதே அடிபோடும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் - திமுகவில் பரபரப்பு!


மதுரை: மதுரை மாநகராட்சியில் சில மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் இப்போதே அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் ‘மேயர்’ பதவியை குறிவைத்து அதற்கான அரசியலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தல் முதல் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால், ஆண்கள் செல்வாக்கு செலுத்தி வந்த மதுரை மேயர் பதவியை இனி தொடர்ந்து பெண்களே அலங்கரிக்கும் நிலை ஏற்பட்டது. பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, மேயராக இந்திராணி தேர்வு செய்யப்பட்டார். இவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர விசுவாசியான பகுதி செயலாளரும், வழக்கறிஞருமான பொன்வசந்த்தின் மனைவி ஆவார்.

மேயர் ஆவதற்கு முன்பு சிறிதும் அரசியல் அனுபவம் இல்லாத இந்திராணி, முதல் முறையாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற மதுரை மேயர் பதவியை பெற்றார்.

அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் செல் வாக்குடன் இருந்ததால் அவரது பரிந்துரையை ஏற்று இந்திராணியை கட்சித்தலைமை மேயராக்கியது. அதனால், மேயர் பதவியை எதிர்பார்த்த அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோரது ஆதரவு கவுன்சிலர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மேயர் வாய்ப்பில் இருந்த வாசுகி, சரவண புவனேஷ்வரி ஆகியோருக்கு மண்டலத் தலைவர் பதவி கொடுத்து சமாளிக்கப்பட்டது. ஆனாலும், மாநகராட்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் ஆதரவு மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் தனித்தனி கோஷ்டியாக செயல்படுகின்றனர்.

மாநகராட்சி கூட்டங்களில் தங்கள் ஆதரவு அமைச்சரை புகழ்பாடியும், மேயருக்கு நெருக்கடி கொடுப்பதுமாக இவர்களுடைய கோஷ்டி பூசல் வெளிப்படையாக தெரியும் வகையில் இவர்களது செயல்பாடுகள் உள்ளன. பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதி இலாகா மாற்றப்பட்ட பின் மேயருக்கு எதிரான செயல்பாடு அதிகரித்தது. கட்சித்தலைமை அதிருப்தி கவுன்சிலர்களை எச்சரித்து திருநெல்வேலி, கோவை மாநகராட்சி போல் நிலைமை சென்றுவிடாமல் தடுத்து வருகிறது.

இந்நிலையில் நடக்கவுள்ள மதுரை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் கவுன்சிலர் ‘சீட்’ பெறவும், பெண் கவுன்சிலர்கள் மேயர் பதவியை பெறவும் உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இப்போதே பெறும் வகையில், அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.

வார்டுகளில் அடுத்த உள்ளாட்சித் தேர்தலை குறி வைத்து இப்போதே தனி அரசியலும், ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவர்களில், கடந்த முறை மேயர் பதவியை தவற விட்ட மண்டலம்-1 தலைவர் வாசுகி சசிகுமார் அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவுடனும், மண்டலம்-2 தலைவர் சரவண புவனேஷ்வரி மாநகர செயலாளர் தளபதியின் ஆதரவுடன் அடுத்த தேர்தலில் மாநகராட்சி தேர்தலி்ல் மேயர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் கடந்த முறை கவுன்சிலர் ‘சீட்’ பெற முடியாத, சில முக்கிய திமுக மாவட்ட நிர்வாகிகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வைத்து மேயர் பதவி பெறுவதற்கும் முயற்சி செய்து வருகிறார்கள். கவுன்சிலர் சீட், மேயர் பதவியை பெறும் கனவுகளுடனும் மாநகராட்சியில் இப்போதே பலரும் வலம் வர ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தங்களின் வார்டுகளில் முக்கிய பணிகளை முடிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

x