சேலம் அம்மாப்பேட்டை அதிநவீன புறநகர் மருத்துவமனையில் செயல்படாத உள்நோயாளிகள் பிரிவு!


சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை கட்டிடம். | படம்: எஸ்.குரு பிரசாத் |

சேலம்: அம்மாப்பேட்டையில் அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட புறநகர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் குறிப்பாக அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவசர காலங்களில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இம்மருத்துவமனை நீண்டதூரமாக உள்ளதால் அங்கு செல்ல முடியாத சிலர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், சேலம் அம்மாப்பேட்டையில், இரண்டாம் நிலை புறநகர் மருத்துவமனை கட்ட சுகாதாரத்துறை முடிவு செய்தது.

இதையடுத்து சுமார் 1.27 ஏக்கரில் மூன்று தளங்களைக் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது. மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, ஸ்கேன் அறைகள், ரத்த வங்கி, மருந்தகம், ஆய்வகங்கள் ஆகியவை உள்ளன.

பெண்களுக்கான 30 படுக்கைகள் கொண்ட வார்டு, டயாலிசிஸ் வார்டு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஆகியவையும் உள்ளன. மேலும், 2 பெரிய ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பல விபத்துகள் பதிவாகியுள்ளதால், இந்த மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை அளிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனை திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தும், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு என தனியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், உள் நோயாளிகள் பிரிவு செயல்படாமல் உள்ளது. எனவே, இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமித்து உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சேலம் அம்மாப்பேட்டையில் புதியதாக செயல்பாட்டுக்கு வந்த மருத்துவமனையில் போதிய மருத்து வர்கள், செவிலியர்கள் இல்லாததால் காலை முதல் மாலை வரை புறநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் கூட சேலம் அரசு மருத்துவமனைக்கு தான் செல்கின்றனர். அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை நியமித்து உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால், அம்மாப்பேட்டை மருத்துவமனைக்கு செவிலியர்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

அம்மாப்பேட்டையில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது, அந்த மருத்துவமனையில் ஓரிரு வாரங்களில் டயாலிசிஸ் பிரிவு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது, என்றனர்.

x