கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீ மதுரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் சேமுண்டி கிராமத்தில் அதிகமாக பனியர் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நாள்தோறும் கூலி வேலைக்கு செல்வது இவர்களின் தொழிலாக உள்ளது. நவீன காலத்தில் ஒவ்வொரு மாநகரம், நகர மக்களின் முக்கிய தேவைகளாக குடிநீர், சாலை, மின்சார வசதி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் மின்சார வசதி இல்லாமல் இந்த கிராம மக்கள் வாழ்ந்து வந்தனர்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் படிக்க மெழுகுவர்த்தியே வெளிச்சம். வீடுகளில் சமையல் பணிகளையும் செய்து, மின்சார வசதி இல்லாமல் இருட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கும் மின்சார இணைப்பு கிடைக்குமா என நினைக்காத நாட்களே இல்லை.
இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை பார்க்க வேண்டும் என்பதுகூட தெரியாத பழங்குடியினர், சுற்றியுள்ள வீடுகளில் பண்டிகை காலங்களிலும், மற்ற நாட்களிலும் மின் விளக்குகள் எரிவதை கண்டு ஏங்காத நாட்களே இல்லை. ஊராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட நிலையில், மின் இணைப்பு அளிப்பதற்கு ஊராட்சி நிர்வாக முன்வந்தது.
ஆனால், மின்வாரியத்துக்கு முன்வைப்பு தொகை, மின்சார பொருட்களுக்கான தொகை இல்லாமல் இவர்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டது. அன்றாட கூலி பணிகளுக்கு சென்றுவரும் பழங்குடியினர், வீட்டு தேவைக்கான பொருட்களை வாங்கவே தங்களுக்கு ஊதியம் சரியாக உள்ளதென இருந்துவிட்டனர்.
ஆனால், எப்படியும் மின்சாரம் கிடைக்க வேண்டுமென தற்போதுள்ள வார்டு உறுப்பினர் பிந்து மற்றும் ஊராட்சி தலைவர் சுனிலிடம், தங்கள் நிலை குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தன்னார்வலர்களிடையே பழங்குடியினருக்கான மின் இணைப்பு கிடைக்க பெரும் சுமையாக உள்ள முன்வைப்புத் தொகை மற்றும் மின்சார பொருட்கள் வேண்டுமென வார்டு உறுப்பினர் பிந்து தொடர் முயற்சி மேற்கொண்டனர்.
அதன் பலனாக, கூடலூர் ரோட்டரி வேலி மூலமாக பழங்குடியினருக்கு மின்சார வசதி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், பழங்குடியினருக்கு அது கிடைக்குமா என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஒரு வழியாக, தற்போது அவர்களின் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் நிம்மதியடைந்தனர். மூன்று நாட்கள் மின்சார இணைப்பு பணிகள் நிறைவடைந்து, அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதுவரை வெளிச்சத்தை காணாத பழங்குடியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் கூறும்போது, "இப்பகுதிக்கு நீண்ட காலமாக மின்சார இணைப்பு வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம், அவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. ரோட்டரி வேலி அமைப்பினர் மூலமாக, பலகட்ட முயற்சிகளுக்கு பின், தற்போது பழங்குடியினருக்கு மின்சார இணைப்பு கிடைத்துள்ளது" என்றார்.
ரோட்டரி வேலி அமைப்பினர் கூறும்போது, "இங்குள்ள பழங்குடியினருக்கு பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாததால், அவர்களுக்கான உதவிகளை கோரினர். இங்கு எத்தனை வீடுகள் உள்ளன. அவர்களுக்கு மின்சார முன்வைப்புத் தொகை மட்டுமின்றி மின்சாரப் பொருட்களை வாங்கி கொடுத்தோம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க, தங்களால் இந்த உதவிகள் செய்ய முடிந்தது. மேலும், கூடலூரில் பல பகுதிகளிலுள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில், இதுபோல் மின்சார வசதி இல்லாமல் உள்ளவர்களுக்கும் உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்" என்றனர்.