கேரள இறைச்சிக் கழிவுகளால் குப்பை மேடாக மாறும் தமிழக நெடுஞ்சாலைகள்!


கேரளாவில் இருந்து வந்த லாரியில் இருந்து கோமங்கலம் அருகே நெடுஞ்சாலையோரம் திறந்துவிடப்பட்ட மீன் கழிவு நீர்

பொள்ளாச்சி: கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து தமிழக நெடுஞ்சாலையோரங்களில் கொட்டும் நபர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கோழி தீவனங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் உணவுகள் தயாரிக்க, கேரளாவில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பெட்டிகளில் ஐஸ் கட்டி போடப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. ஐஸ் கட்டிகள் உருகுவதால் உண்டாகும் மீன் கழிவு நீரை, வாகன ஓட்டுநர்கள் சாலையோரங்களில் திறந்து விடுகின்றனர். இதனால் சாலையில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி பகுதியில் கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவு மற்றும் மீன் கழிவு நீரை தமிழக சாலையோரங்களில் கொட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 9-ம் தேதி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடிக்கு மீன்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த வாகனம் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் புதூர் அருகே சென்றபோது, வாகனத்தில் இருந்து மீன் கழிவு நீரை சாலையில் திறந்து விட்டனர். நெடுஞ்சாலையில் கடும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சரக்கு வாகனத்தை பிடித்து கோமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல, கடந்த 13-ம் தேதி பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் தனியார் கல்லூரி அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சிக் கழிவுகளை சாலையோரம் கொட்ட முயன்ற வாகனத்தை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று காலை திருவாரூர் பகுதியை செல்வம் (46), கடலூரைச் சேர்ந்த பழனிவேல் (50) ஆகியோர் கேரளாவில் இருந்து சரக்கு வாகனத்தில் மீன்களை ஏற்றிச்சென்றபோது, கோமங்கலம் அருகே மீன் கழிவு நீரை சாலையோரம் திறந்து விட்டுள்ளனர்.

அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சரக்கு வாகனங்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீஸார் இரு வாகன ஓட்டுநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கேரள மாநிலத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், இறைச்சிக் கழிவுகள், ஹோட்டல் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவற்றை பொது இடங்களில் கொட்ட அனுமதிப்பதில்லை.

கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர், கொல்லம், கோட்டயம், கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கோழி இறைச்சிக் கழிவுகள், காய்கறி, உணவு கழிவுகள், வாகன கழிவுகளை இரவு நேரங்களில் லாரிகள், மினி ஆட்டோக்களில் டன் கணக்கில் கொண்டுவந்து, தமிழக எல்லையில் உள்ள கிராமங்களின் சாலை ஓரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பிடிபடும் வாகனங்களுக்கு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பதால், அவர்கள் மீண்டும் மீண்டும் கழிவுகளை கொண்டு வந்து தமிழக பகுதியில் கொட்டிச் செல்கின்றனர்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்ளை தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். கேரளாவிலிருந்து கழிவுகளைக் கொண்டு வரும் வாகன ஓட்டுநர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து கொட்டுவதை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

x