கும்பகோணம்: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 2018ல் தொடங்கியது. தஞ்சாவூர்- சோழபுரம் வரை 47.84 கி.மீ, கும்பகோணம் சோழபுரம் - சேத்தியாதோப்பு வரை 50.48 கி.மீ. சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி வரை 65.96 கி.மீ என 3 பிரிவுகளாக மொத்தம் 164.28 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலைப் பணிகள் 3 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
இதில், தஞ்சாவூர்- சோழபுரம், சோழபுரம்- சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகளை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செப்.13-ம் தேதி கும்பகோணத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், இந்த சாலையில், கும்பகோணம் முதல் தஞ்சாவூர் இடையே உள்ள தாராசுரம், திருவலஞ்சுழி, கோடுகிளி, பாபநாசம், கோபுராஜபுரம், அன்னப்பன்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள மேம்பாலங்களில் ஒளிரும் மின் விளக்கு பொருத்தி உள்ளதால், இரவு நேரத்தில் மின்னொளியில் இந்த மேம்பாலங்கள் ஜொலிக்கின்றன. இது பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதால், அண்மைக்காலமாக ஏராளமானோர் இந்த பாலங்கள் வழியாக வாகனத்தில் பயணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அன்னப்பன்பேட்டையைச் சேர்ந்த ஆர்.சீனிவாசன் கூறியது: கும்பகோணம்-தஞ்சாவூர் நான்கு வழிச் சாலையில் பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், அண்மைக்காலமாக மேம்பாலங்களில் வெள்ளை நிறத்தாலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அவை இரவில் ஜொலிக்கின்றன. ஆனால், நான்கு வழிச் சாலையின் இருபுறங்களில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமச் சாலைகளை இணைக்கும் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் தடுமாற வேண்டி உள்ளது. சிலர் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், நான்கு வழிச் சாலையில் இருட்டாக உள்ள பகுதி மட்டுமில்லாமல், கிராமங்களை இணைக்கும் சாலைப் பகுதிகளில் அவசியம் மின்விளக்கு அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தேசிய நெடுஞ் சாலை ஆணைய அலுவலர் கூறியது, “கும்பகோணம்- தஞ்சாவூர் இடையே உள்ள மேம்பாலங்களில் மின்சாரத்தால் இயங்கும் வெள்ளை நிற மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பிரதான கிராம சாலைகளை இணைக்கும் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படும். சிறிய கிராம சாலைகளை இணைக்கும் பகுதியில் சோலார் மின் விளக்குகள் பொருத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.