கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் உள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு 4 நாட்களில் 119 டன் எடையிலான பூ, காய்கறிகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 25 முதல் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு கோவை உள்ளிட்ட சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
விமான நிலைய வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகத்தின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்கள் கையாளப்படுகின்றன. பண்டிகை நாட்களில் அதிகளவு சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஓணம் பண்டிகைக்காக கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கத்தைவிட அதிக எடையிலான காய்கறிகள், பூக்கள் ஆகியவை கையாளப்பட்டன.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக உள்நாட்டு போக்குவரத்துப் பிரிவில் கோவையில் இருந்து பல நகரங்களுக்கு அனுப்பப்படும் (அவுட்பவுண்ட் பிரிவில்) 25 டன் எடையிலான சரக்குகள் தினமும் கையாளப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக உள்நாட்டுப் பிரிவில் சரக்கு கையாளுகை அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி 34 டன், 11-ம் தேதி 33 டன், 12-ம் தேதி 27 டன், 13-ம் தேதி 25 டன் என நான்கு நாட்களில் மட்டும் 119 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இவற்றில் கேரட், பீட்ரூட், கோவைக்காய், முருங்கை ஆகிய காய்கறிகளும், கொத்தமல்லி மற்றும் பூக்கள் அதிகளவு புக்கிங் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக 11, 12 ஆகிய தேதிகளில் கொத்தமல்லி மட்டும் 5 டன் வரை புக்கிங் செய்யப்பட்டு, பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர காய்கறிகளுக்கு இணையாக பூக்களும் அதிகளவு கையாளப்படுகின்றன. வெளிநாட்டுப் பிரிவில் ஓணம் பண்டிகைக்காக குறிப்பிட்டு சொல்லும்படி அதிக காய்கறி, பூக்கள் கையாளப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.