பகீர் வீடியோ; துணிச்சலுக்கு வயது தேவையில்லை: 12 அடி மலைப்பாம்பைப் பிடித்த 10 வயது சிறுவன்!


முதியவருடன் சேர்ந்து மலைப்பாம்பை பிடித்த சிறுவன்

ஊருக்குள் புகுந்த 12 அடி மலைப்பாம்பை தைரியத்துடன் பிடித்த 10 வயது சிறுவனின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக் குவிந்து வருகிறது.

கர்நாடகா மாநிலம், சாலிகிராமத்தில் உள்ள பகுதியில் 12 அடி மலைப்பாம்பை முதியவர் ஒருவர் கண்டார். அதன் வால் பகுதியைப் பிடித்து அந்த முதியவர் இழுத்தார். ஆனால், புதருக்குள் இருந்த மலைப்பாம்பு வெளிய வர மறுத்தது. அதை அப்பகுதி மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மலைப்பாம்பின் தலையைப் பிடிக்கும் சிறுவன்

அப்போது 10 வயது சிறுவன், துணிவுடன் புதருக்குள் சென்று கையால், அந்த மலைப்பாம்பின் தலையைப் பிடித்து வெளியே தூக்கி வந்தான். இதனால் மலைப்பாம்பு அவனது கையைச் சுற்றியது. ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல் அந்தப் பாம்பை புதருக்கு வெளியே அந்த சிறுவன் கொண்டு வந்தான்.

இதைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர், ஒரு சாக்குப் பையைக் கொண்டு வரவும், அந்த மலைப்பாம்பை பத்திரமாக அந்த பைக்குள் அந்த சிறுவன் போடுகிறான்.

புதருக்கு வெளியே கொண்டு வரப்படும் மலைப்பாம்பு

இதுதொடர்பான வீடியோ இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவனின் துணிச்சலான இந்தச் செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில், யாரும் பாம்பை அடிக்காதது பெரும் ஆச்சரியம் என்றும், மங்களூரு, உடுப்பி, குந்தாபுரா, தென் கனரா மற்றும் வட கனரா பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் கார்வார் வரை செல்பவர்கள் பாம்புகளைத் துன்புறுத்தமாட்டார்கள், அடிக்கமாட்டார்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். அத்துடன் சிறுவனை டேர் டெவில் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

x