சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 3,846 சத்துணவு ஊழியர் பணியிடங் களில் 2,253 இடங்கள் காலியாக இருப்பதால், ஆயிரக்கணக்கான ஏழை மாணவ, மாணவியருக்கு முறையாக சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 1,293 மையங்கள் உள்ளன. இம்மையங்கள் மூலம் மாணவர் களுக்கு சத்துணவு வழங்க 1,280 அமைப்பாளர்கள், 1,283 சமையலர்கள், 1,293 சமையல் உதவியாளர்கள் என 3,846 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களை ஆட்சியர் அறிவிப்பு செய்து நிரப்ப வேண் டும். ஆனால் பல ஆண்டுகளாக பணியாளர்களை நியமிக்காததால், நாளுக்கு நாள் காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. தற்போது 2,253 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் 807 அமைப்பாளர், 433 சமையலர், 1,013 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரு பொறுப்பாளர் 3 முதல் 5 மையங்கள் வரை கவனிக்கின்றனர். பெரும்பாலான மையங்களில் சமையலர் அல்லது உதவியாளர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒரு சில மையங்களில் சமையலர், உதவியாளர் ஆகிய 2 பணி யாளர்களுமே இல்லை. அப்பள்ளி மாணவர்களுக்கு அருகில் உள்ள மையங்களில் இருந்து சத்துணவு வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
காலி பணியிடங்களை நிரப் பாததால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிரமம் ஏற் படுவதாக தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மாவட்ட நிதி காப்பாளர் எஸ்.நடராஜன் கூறியதாவது: 2017, 2020 என 2 முறை சத்துணவு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி யிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், சில காரணங்களால் நேர்காணல் நடத்தாமலேயே நிறுத்தப்பட்டன. பணியிடங்கள் காலியாக இருப் பதால் சத்துணவு வழங்குவதில் சிரமம் உள்ளது. இதேநிலை நீடித்தால் சத்துணவு திட்டத்தில் பணியாளர்களே இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘அரசு அனுமதித்தால்தான் மாவட்ட நிர்வாகம் மூலம் காலியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க முடியும். தமிழகம் முழுவதும் சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன’ என்றனர்.