ஈரோடு: ஈரோடு நாகமலை, எழுமாத்தூர் மலைக்குன்றுகளில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், வனப்பகுதிகளில் வாழும் அரியவகை உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நாகமலை மற்றும் எழுமாத்தூர் குன்றுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல படிக்கட்டு வசதி உள்ளது. இந்நிலையில், வாகனங்கள் மூலம் பக்தர்கள் மலை உச்சிக்கு செல்லும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த குன்றுகளில் வாழும் அரியவகை பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகமலையில் 413 உயிரினங்கள்: இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில நிர்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் உயிர் பன்மயம் நிறைந்த மலைக் குன்றாக நாகமலை உள்ளது. 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றுகளில், அதிக வகையான பறவைகள் வாழும் இருப்பிடமாக நம்பியூர் அருகே உள்ள நாகமலை அறியப்பட்டுள்ளது.
நாகமலையில் இதுவரை 126 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 102 பூச்சிகள், 19 எட்டுக்காலிகள், 14 ஊர்வனங்கள், 10 பாலூட்டிகள் உள்பட மொத்தம் 413 உயிரினங்கள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில உயிரினங்கள் ஈரோடு மாவட்டத்தில் அரிதாக காணக்கூடியவை ஆகும்.
சிறப்பம்சமாக பறவைகளின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கும் இரைக்கொல்லிப் பறவைகளான ராசாளிக் கழுகு மற்றும் கொம்பன் ஆந்தை போன்றவை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
வலசை வரும் பறவைக் கூட்டம்: மேலும், சிறிய தவிட்டு புறா, கரிச்சான், சில்லை, தேன்சிட்டு, சிலம்பன், குக்குறுவான், சின்னான், மாம்பழச்சிட்டு போன்ற 35 உள்ளூர் பறவை இனங்களும் நாகமலையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
சாம்பல் கழுத்து காட்டுச்சில்லை, சாம்பல் கீச்சான், மரநெட்டைக்காலி, பழுப்பு மார்பு பூச்சி பிடிப்பான் போன்று அரிதாக வலசை வரும் பறவைகள், நீலப் பூங்குருவி, வெண்தோள் கழுகு, கருந்தலை குயில் கீச்சான், தோட்டகள்ளன், நாணல் கதிர்க்குருவிகள், சூறைக்குருவி போன்ற மத்திய ஆசிய பறவைகள் வழிதடத்தில் வலசை வரும் 32 பறவை இனங்கள் நாகமலையை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
இந்த உயிரினங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய, நாகமலையில் மூன்று இடங்களில் இயற்கையாக உருவான சுனை நீர்த்தேக்கம் உள்ளது. இப்படி அரியவகை உயிரினங்களின் வாழ்விடமாக கருதப்படும் நாகமலையில், இயற்கை எழிலை சிதைக்கும் வகையில் மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சிவரை, காடுகளை அழித்து பாறைகளை உடைத்து மண் சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
மலையின் உச்சியில் உருவாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடமானது, சுனை நீர்த்தேக்கத்தை பாதிக்கும் வகையில் சுனையின் அருகாமையிலே அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
பாதிக்கப்படும் பறவைகள்: நாகமலையில் காடுகளை அழித்து உருவாக்கப்பட்டுள்ள சாலைகளில், போக்குவரத்து தொடர்ந்து நிகழும் போது அங்கு வாழும் பல்லுயிர்களின் வாழ்விடம் முற்றிலும் அழிந்து விடும். உலக அளவில் பறவைகள் இருப்பை ஆவணம் செய்யும், மக்கள் அறிவியல் தளமான eBird அமைப்பு, இந்த தரவுகளை சுட்டிக் காட்டுகிறது.
குறிப்பாக எந்தெந்த குன்றுகளில் சாலைகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து நடக்கிறதோ, அங்கெல்லாம் பறவைகளின் இருப்பு, பெரிதளவில் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏற்கெனவே உள்ள மண் சாலையை ஒட்டிய பகுதிகளில், மண் அரிப்பு அடிக்கடி நிகழ்ந்து, குன்றின் வளம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மண் சாலையின் மீது தார் போடப்பட்டால், அது இவ்வாழ்விடத்திற்கு மீளமுடியாத அழிவை ஏற்படுத்தும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.
எழுமாத்தூர் மலைக்குன்று: ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் உள்ள மலையில் முருகன் கோயில் உள்ளது. இந்த மலையில் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் இங்கு 46 வகையான பறவைகள், 50 வகை பூச்சிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அடர்ந்த காடுகள் அடங்கிய இப்பகுதியில் இன்னும் பல வகையான பூச்சிகளும் பல்லுயிர்களும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
முறையான சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படாமல், எழுமாத்தூர் மலையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது, இங்கு வாழும் உயிரினங்களின் வாழ்விடங்களை பெரிதும் பாதிக்கும். அடர்ந்த வனம் உள்ள இப்பகுதியை, வனத்துறையினர் ஆய்வு செய்து காப்புக்காடுகளாக அறிவிப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும், சித்தோடு பகுதியில் உள்ள ஆண்டவர் மலைக்குன்று பகுதியிலும் தார்ச்சாலை அமைப்பதை தடுத்து நிறுத்தி, பல்வேறு உயிரினங்களைக் காக்கவும் குரல்கள் எழுந்துள்ளன.
வனத்துறை நடவடிக்கை தேவை: இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், ஈரோடு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில நிர்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது: மலை, குன்றுகள் மேல் கோயில்களை அமைத்ததே அந்த மலையின் வளத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் என்ற கருத்து உள்ளது.
அதோடு, மலை மேல் உள்ள இறைவனை இயற்கைச் சூழலில், நடந்து சென்று வணங்குவதால், உடல்நலம் மேம்படும் என்ற அறிவியல் நோக்கமும் அதில் உள்ளது. அப்படியிருக்க, நாகமலை மற்றும் எழுமாத்தூர் மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனப்பகுதியை பாதிக்காமல், அவர்கள் மலை உச்சியை அடைய அரசு ஏற்பாடு செய்யலாம்.
அதை விடுத்து, பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் மலைக்குன்றுகளில் சாலை அமைப்பதும், அதில் கட்டுப்பாடு இல்லாமல், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்க அனுமதிப்பதும், அழிவை ஏற்படுத்தும். சாலைப்பணிக்காக சேதமாக்கப்பட்ட வனத்தை, வனத்துறையின் உதவியுடன், மீள் உருவாக்கம் செய்ய அரசு முன்வர வேண்டும்.
மேலும், நாகமலைக் குன்றில் பல தொன்மை சின்னங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் தளமாக இம்மலைக்குன்றை ஆராய்ந்து அறிவிக்க, அரசும் வனத்துறையினரும் முன்வர வேண்டும். இதேபோல, எழுமாத்தூர் மலைக்குன்று மற்றும் ஆண்டவர் மலைக்குன்றுகளின் இயற்கை எழிலைக் காக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.