உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைக்குட்பட்ட திருமூர்த்தி மலை, ஈசல் திட்டு, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கோடந்தூர், ஆட்டுமலை, மடத்துக்குளத்துக்குட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 4000 பேர் வசிக்கின்றனர்.
மேற்படி மலை கிராமங்கள் ‘செட்டில்மெண்ட்’ கிராமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கிராமங்கள் அனைத்தும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் சாலை, தெருவிளக்கு, மருத்துவமனை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம் உள்ளிட்ட இதர தேவைகளுக்கு உடுமலை வர வேண்டியுள்ளது. இதற்காக திருமூர்த்திமலை வனப்பகுதி வழியாக சுமார் 5 கி.மீ. கால்நடையாக வந்து செல்ல வேண்டும். வாகனங்களை பயன்படுத்தி வர வேண்டுமெனில், வால்பாறை வழியாக சுமார் 100 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.
மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி கிராமங்களில் வன விலங்குகளால் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகள், தீவிர நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட கிராமத்துக்கு செல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கிதான் வர வேண்டும் என்ற நிலை உள்ளது.
மேற்படி கிராமங்களில் இருந்து கரடு, முரடான காட்டு பாதை, ஆறுகளை கடந்து தூக்கி வரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. திருமூர்த்திமலையில் இருந்து குழிப்பட்டி வரை சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில், பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தளி பேரூராட்சி மூலமாக சாலை அமைக்க உத்தரவிட்டார். பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநரிடமிருந்து உரிய அனுமதி இருந்தால் மட்டுமே சாலை பணிகள் அனுமதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக, மலைவாழ் மக்கள், பொக்லைன் ஆபரேட்டர்கள் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இதையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, திருமூர்த்திமலையை ஒட்டிய பொன்னாலம்மன் சோலையை சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான புகாரை எழுப்பினர். அதைத்தொடர்ந்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் மலைப் பகுதியில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் குருமலையை சேர்ந்த வெங்கிட்டான் (45) என்பவர் வயலுக்கு சென்றபோது, ஒற்றை யானை தாக்கி படுகாயமடைந்தார். அவரை அங்குள்ள மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி தூக்கி வந்து உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஈசல் திட்டு பகுதியைச் சேர்ந்த பாப்பா (35) என்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, கிராம மக்கள் தொட்டில் கட்டி அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பாக மலைவாழ் மக்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது: வன உரிமைச் சட்டம் 2006-ன் பிரிவு-2, அடிப்படை கட்டமைப்புகளுக்காக (ஒரு ஹெக்டேருக்கு குறைவாக) காட்டு நிலங்களை ஒதுக்க வேண்டும். கிராமசபையின் பரிந்துரையின்பேரில் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மரங்கள் வெட்டப்பட வேண்டியிருந்தால், ஒரு ஹெக்டேருக்கு 75-க்கும் மிகாத மரங்களாக இருக்க வேண்டும்.
மேற்படி பணிகளுக்கு வனத் துறையினரிடம் விண்ணப்பித்து டெல்லியில் இருந்துதான் அனுமதி வர வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், வன உரிமைச் சட்டம் 2006, கிராமசபை தீர்மானம் நிறைவேற்றி, கோட்ட அளவிலான வன உரிமைக் குழுவும், மாவட்ட அளவிலான வன உரிமைக் குழுவும் ஒப்புதல் வழங்கினால்போதும். அப்படியிருந்தும், இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பழங்குடியின மக்களை சென்றடையவில்லை.
விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் மலைவாழ் மக்கள் நலனுக்கு எதிரான சூழ்ச்சி திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. இதனை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, நூற்றாண்டுகளுக்கும் மேலாக எந்த நலத்திட்டங்களும் சென்றடையாத மலைவாழ் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றனர்.
உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் சாலை பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், வனத்துறை உயர் அதிகாரிகளின் உரிய உத்தரவு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.