அடுத்த வருடம் முதல் வாட்ஸ் அப் அன்லிமிடெட் பேக்கப் முடிவுக்கு வருகிறது. அவசியப்படும் பயனர்கள் இனி அதற்கான கூகுள் ஒன் கிளவுட் சேவைக்கு சந்தா கட்டி பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம், வாட்ஸ் அப் சேவையை கைகொண்ட பிறகு, பயனர்களை குஷிப்படுத்தும் ஏராளமான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்ஸ் அப் பயனர்களை சங்கடத்துக்கு ஆளாக்கும் மெட்டா அறிவிப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தற்போதைய பேக்கப் கட்டுப்பாடு வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.
வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் பேக்கப் வசதி மிகவும் அனுகூலமானது. கூகுள் கணக்குடன் இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில், வாட்ஸ் அப் கணக்கை அத்துடன் இணைத்துவிட்டால் போதும். வாட்ஸ் அப் சாட், புகைப்படங்கள், வீடியோக்கள், குரூப் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் அவ்வப்போது கூகுள் டிரைவ் உதவியோடு பேக்கப் சேகரமாகும். பழைய செல்போனில் இருந்து புதிய செல்போனுக்கு மாறும்போது, சேதாரம் இன்றி வாட்ஸ் அப் கணக்கு மற்றும் உரையாடல்களை மீட்க இந்த பேக்கப் பேருதவியாக இருக்கும்.
இவை வரம்பின்றி இருந்ததற்கு தற்போது மெட்டா நிறுவனம் செக் வைத்துள்ளது. இதன்படி கூடுதல் பேக்கப் சேவையை பெற விரும்புவோர் இனி, கூகுள் ஒன் கிளவுட் சேவையை அதற்கான சந்தா கட்டி பெற வேண்டியிருக்கும். கூகுள் ஒன் கிளவுட் சேவையை மாதம் ரூ130 அல்லது வருடத்துக்கு ரூ1300 செலுத்தி பெறலாம். இதன் மூலம் 100 ஜிபி அளவுக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஒன் கிளவுட் வசதியை பயனர்கள் மத்தியில் கிட்டத்தட்ட திணிக்கும் ஏற்பாட்டில் உள்ளது. ஏற்கனவே கூகுள் போட்டோ உள்ளிட்ட சேவைகளை பெற்று வந்தவர்களை, கூடுதல் ஸ்டோரேஜ் என்ற பெயரில் கிளவுட் சேவைக்கு மடைமாற்றியுள்ளது.
கூகுள் டிரைவ் சேவையே போதும் என்பவர்கள் அதன் 15 ஜிபிக்கு ஏற்ப தங்களது சேமிப்பக கொள்ளளவை குறைத்தாக வேண்டியிருக்கும். அவை ஏற்கனவே இருக்கும் பதிவுகளை நீக்குவதன் மூலம் சாத்தியமாக்கலாம்; அல்லது புகைப்படம் மற்றும் வீடியோ இல்லாத, வெற்று சாட் மட்டுமே பேக்கப் மேற்கொள்ளுமாறு வாட்ஸ் அப் செட்டிங்கில் மாற்றம் செய்யலாம்.