கப்பல் போக்குவரத்து பிரச்சினை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு


திருப்பூர்: கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வால் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் தத்தளிக்கிறது. பின்னலாடைத் தொழில் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. நூல் விலை உயர்ந்தாலும் சரி, மூலப்பொருட்கள் விலை உயர்ந்தாலும், இந்த தொழில் தடுமாற்றங்களுடன் மீண்டெழுகிறது.

பின்னலாடை ஏற்றுமதிக்கு மிக முக்கியமானதாக கப்பல் போக்குவரத்து உள்ளது. சமீபகாலமாக கப்பல் போக்குவரத்தில் கன்டெய்னர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. கடந்த 3 மாத காலமாக கன்டெய்னர்கள் போதிய அளவில் கிடைக்காமல் தத்தளிக்கிறது பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்.

திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலமாக ஏற்றுமதி நடைபெறுகிறது. தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகம் வழியாக பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: இந்தியா இன்றைக்கு 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகம் நடைபெற முக்கிய காரணமே கப்பல் போக்குவரத்து தான். 40 அடி கன்டெய்னருக்கு, 3 மாதங்களுக்கு முன்பு 1700 டாலர் கட்டணம் வசூலித்தனர். தற்போது கன்டெய்னர் தட்டுப்பாட்டை காரணங்காட்டி, கட்டணத்தை 5 மடங்கு அதிகரித்து 7 ஆயிரம் டாலர் வாடகை வசூலிக்கின்றனர்.

ஏற்றுமதிக்கு கன்டெய்னர் மூலம் பொருட்களை அனுப்ப, இந்தியா இன்னும் சீனாவையே நம்பி உள்ளது. சீனாவில் இருந்து வரும் கன்டெய்னர்களுக்கு, பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முன்பெல்லாம் சீனாவில் இருந்து வரும் கன்டெய்னர்கள், காலியாக செல்லாமல், இங்கிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும். தற்போது காலியாகவே செல்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அவர்களுக்கு கிடைக்கும் உச்சபட்ச வருவாய்தான்.

பெரிய நிறுவனங்களில் ஆர்டர் எடுக்கும் பையர்கள், ஒப்பந்த அடிப்படையில் கப்பல் நிறுவனங்களை புக் செய்துவிடுகிறார்கள். ஆனால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் ஆர்டர் அனுப்புபவர்களின் நிலை பெரும் திண்டாட்டமே.

கன்டெய்னர் உற்பத்தியில் இந்தியா தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுத்துறை கப்பல் நிறுவனங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதில் கவனம் செலுத்துவதில்லை. பருவமழை காலத்தின் போது ஏற்படும் பேரிடர் பிரச்சினை போல், அரசு ஏற்றுமதி பிரச்சினையை அணுகுகிறது. இது முற்றிலும் தவறு.

ஏற்றுமதி, இறக்குமதி தடைபடும்போது வேலைவாய்ப்பு, வர்த்தகம், அந்நிய செலாவணி என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. மனிதவளம் நிறைந்த இந்தியாவில் தொழில்வளம் மிக, மிக முக்கியம். இவற்றை கருத்தில் கொண்டு, நீண்ட கால தொலைநோக்கு திட்டமாக, கன்டெய்னர் உற்பத்தியை மத்திய அரசு உடனடியாக தொடங்குவதுடன், பொதுத்துறை கப்பல் நிறுவனங்களையும் கூடுதலாக தொடங்க வேண்டும்” என்றார்.

கட்டமைப்பு பலவீனம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறும்போது, “ஆர்டர் தரும் சரக்குகள் உரிய காலத்தில் சென்று சேர வேண்டும் என்பது தான், ஏற்றுமதியில் மிக முக்கியம். திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகள், கன்டெய்னர் லாரிகளில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து சிறிய கப்பலில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தான் பெரிய சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்திய துறைமுகங்களில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடிக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் செலவில் கொண்டு செல்லப்படும் துணிகளை, மும்பை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல ரூ.70 ஆயிரம் செலவாகிறது.

இதனால் மும்பைக்கு கொண்டு செல்ல கூடுதலாக ரூ.50 ஆயிரம் செலவாகிறது. கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் அதன் மூலம் வாடகை உயர்த்துவது என்பது, ஏற்றுமதியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, திருப்பூரின் ஏற்றுமதி மட்டுமின்றி, அனைத்து ஏற்றுமதியிலும் இந்தியா மிளிரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x