கோவை சரக காவல் துறை சார்பில் 7,419 கிராமங்களில் கண்காணிப்பு குழு - பின்புலம் என்ன?


கோவையில் துப்பாக்கியுடன் இரவு நேர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார்.

கோவை: கோவை சரக காவல்துறையின் சார்பில், கோவை சரகத்தில் 7,419 கிராமங்களில் ‘கிராம கண்காணிப்புக் குழு’ அமைக்கப்பட்டு, சட்டம் ஒழங்கு பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் தெரிவித்தார்.

கோவை சரக காவல்துறையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் கோவை சரக காவல்துறை சார்பில், கிராமங்கள் தோறும் ஒரு தனிக்குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவை சரக காவல்துறைக் குட்பட்ட கோவையில் 1,135 கிராமங்கள், திருப்பூரில் 2,358 கிராமங்கள், ஈரோட்டில் 2,793 கிராமங்கள், நீலகிரியில் 1,133 கிராமங்கள் என மொத்தம் 7,419 கிராமங்களில், கடந்த 2 மாதங்களில் போலீஸார் சார்பில் ‘கிராம கண்காணிப்புக் குழு’ (வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அந்தந்த கிராமங்களுக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், குற்றத் தடுப்பு மற்றும் போக்சோ உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

இக்குழுவினர், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கூடுவர். போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுத்தல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுத்தல், ஆன்லைன் மோசடிகள், சைபர் கிரைம் குற்றங்களை தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல், குற்றச் சம்பவங்களை தடுத்தல், ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப் படுத்துதல், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இதுவரை கோவையில் 358, திருப்பூரில் 1,030, ஈரோட்டில் 1,668, நீலகிரியில் 1,133 என மொத்தம் 4,172 கிராமங்களில் கிராம கண்காணிப்புக் குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களிலும் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எந்த சட்ட விரோத செயல்கள், குற்றச் செயல்கள் நடந்தாலும், சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளிட்ட எவ்வித தகவல்களாக இருந்தாலும் உடனடியாக அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைக்கும் வகையில், இக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க இக்குழு உதவுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை காவல் ஆய்வாளர் களை தொடர்பு கொண்டு தெரிவிக் கும் வகையில் இக்குழுவின் செயல்பாடு நல்ல முறையில் உள்ளது, என்றார்.

இரவு நேர ரோந்து பணியின்போது போலீஸார் துப்பாக்கி வைத்திருக்க உத்தரவு: கோவை சரக காவல்துறை எல்லைக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியி்ல் கடந்த 1-ம் தேதி இரவு மர்மநபர்கள் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களி்ல் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாரை கடப்பாறையால் தாக்கியும், பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்கியும் மர்மநபர்கள் தப்பியோடினர். இதையடுத்து, துப்பாக்கியுடன் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு போலீஸாருக்கு கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கோவையில் 159 வாகன தணிக்கை இடங்களும், திருப்பூரில் 16 நிரந்தர சோதனைச் சாவடிகள் உட்பட 56 வாகன தணிக்கை இடங்களும் உள்ளன. நீலகிரியை தவிர, மீதமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இரவுநேர ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள், துப்பாக்கியை உடன் எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கைத்துப்பாக்கியும், காவலர்கள் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியையும் ரோந்துப் பணியின் போது உடன் வைத்திருப்பர்’’ என்றார்.

x