குறள் மணக்கும் மதுரை மாநகர காவல் ஆணையர் முகாம் அலுவலகச் சுவர்கள்!


மதுரை: மதுரையில் திருக்குறள் பேசும் விதமாக மாநகர காவல் ஆணையர் அலுவலக முகாம் சுவர்களில் முக்கிய குறள்கள் எழுதப்பட்டுள்ளன. இது பிறரை வெகுவாக ஈர்த்துள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையராக ஜே.லோகநாதன் பொறுப்பேற்ற பிறகு, மாநகர போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் அன்பர்களுக்கு போரடிக்காமல் இருக்க மெல்லிசை இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு ஒரு விதமான அமைதியை ஏற்படுத்தும் வகையிலும், மெல்லிசை இடையே ஹெல்மெட், கார் சீட் பெல்ட் அணிதல் போன்ற சாலை போக்குவரத்து விதிகளை நினைவூட்டும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டன.

அத்துடன் முக்கிய திருக்குறள்களையும் ஆடியோ வாய்ஸில் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகரிலுள்ள முக்கிய சிக்னல்களில் இது தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் மதுரை - அழகர்கோவில் சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் எதிரிலுள்ள காவல் ஆணையர் முகாம் அலுவலகத்தின் (வீடு) சுவரிலும் வாகன ஓட்டிகள், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருக்குறள்கள் எழுதப்பட்டுள்ளன.

அவ்வழியாக பிளாட்பாரம், சாலையில் நடந்து செல்வோரை இது வெகுவாக கவர்ந்துள்ளது. சிலர் நின்று படித்துவிட்டும் செல்கின்றனர். அதுவும், காவல் ஆணையர் முகாம் அலுவலக முகப்பில் இரு புறத்திலும் தந்தை, மகனைப் போற்றும் குறள்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காவல் ஆணையர் ஜே.லோகநாதன் கூறுகையில், “திருக்குறள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். குறளில் சொல்லாத கருத்துகளே இல்லை எனக் கூறலாம். திருக்குறளிலுள்ள கருத்துகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் ஏற்கெனவே நகரிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கவைக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் என்னுடைய முகாம் அலுவலக சுவருக்கு பெயின்ட் அடித்தபோது, அதிலும் முக்கிய திருக்குறள்களை எழுதிப்போடலாம் எனத் தோன்றிது. அனைத்து குறள்களையும் எழுத முடியாத சூழலில் தேர்ந்தெடுத்த சில முக்கிய குறள்களை மட்டுமே முக்கிய சாலையில் உள்ள சுவர்களில் எழுதியுள்ளோம்.

அவ்வழியாக செல்லும் மக்கள் சுவரை பார்க்கும்போது, அவர்களுக்கு ஒரு விதமான செய்தியை சொல்லும் வகையில் இது அமையும் என நம்புகிறேன். தனக்கு தனது தந்தை மீது மிகுந்து பற்று உண்டு. இதை வெளிப்படுத்தும் விதமாக அலுவலக முகப்பில் குறிப்பாக, தந்தை மற்றும் மகனைப் போற்றும் இரு குறள்கள் இடம் பெற்றுள்ளன. விழிப்புணர்வுக்கான ஒரு முயற்சி தான் வேறொன்றுமில்லை” என்று லோகநாதன் கூறினார்.

x