மும்பையில் ஓடும் ரயிலில் இளம் பெண்கள் குத்தாட்டம் போடுவது அதிகரித்து வருவதால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வேத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரீல்ஸ் எனப்படும் குறுவீடியோக்களுக்கு இன்ஸ்டாகிராம் தளம் அமைத்து தருகிறது. இளசுகள் மத்தியில் இத்தகைய வீடியோக்களுக்கு மவுசு அதிகம் என்பதால், இன்ஸ்டாவை பின்பற்றி சகல சமூக ஊடகங்களும் இந்த ரீல்ஸ் வீடியோக்களுக்கான வாய்ப்பை அதிகரித்து வருகின்றன. கிரியேட்டர்கள் மத்தியிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக ரீல்ஸ் விளங்கி வருகிறது.
தங்களுடைய ரீல்ஸ் எடுபட வேண்டும், ஹிட்டாக வேண்டும் என்பதற்காக இளசுகள் எதையும் செய்யத் துணிகின்றனர். இதற்காக ஆட்சேபகர வகையிலான உடுப்புகளுடன், பொது இடங்களில் குத்தாட்டம் போடுகின்றனர். அருகிலிருப்போர் அதிர்ச்சி அடையும் வகையிலும், முகம் சுளிக்கச் செய்யும் அளவுக்கு தங்களது குத்தாட்டம் அமைவது குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை.
பெருநகரங்களின் உள்ளூர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், அவற்றுக்கான பிளாட்பாரங்கள் ஆகிய இடங்களில் இந்த ரீல்ஸ் குத்தாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் மும்பை உள்ளூர் ரயிலில் இவ்வாறு அரங்கேறிய குத்தாட்டம் ஒன்று ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிருப்தியை சம்பாதித்துள்ளன. பொது இடங்களில் உலவுவதற்கு சற்றும் பொருத்தமில்லாத அரைகுறை ஆடைகளுடன், இளம் பெண் ஒருவர் போஜ்புரி பாடலுக்கு நடமாடிய வீடியோ பொதுமக்களின் அர்ச்சனைக்கும் ஆளாகி இருக்கிறது.
திடீரென எகிறிக் குதித்து தையத்தக்கா அசைவுகளை வெளிப்படுத்தும் அப்பெண்ணால், அருகில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதில் சிலர் அந்த ரீல்ஸ் வீடியோவில் தங்கள் அடையாளம் வெளிப்படுவதை தவிர்க்க முகத்தை மூடிக்கொள்ள முயல்கின்றனர். இந்த வகையில் மூன்றாம் நபர்களின் தனியுரிமைக்கும் ஆர்வக்கோளாறுகளின் ரீல்ஸ் மோகம் வேட்டு வைக்கிறது.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியோடு, ரயில்வே துறைக்கான புகாராகவும் அதனை பதிவிட்டனர். இதனையடுத்து ரயில்வே போலீஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த ரீல்ஸ் மோகத்தை கட்டுக்குள் கொண்டுவர, டெல்லி மெட்ரோ நிர்வாகம் வெளிப்படையான தடை உத்தரவினை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!
திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!
ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!
அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!