தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டண உயர்வுக்கு அமைச்சர் காரணம் கூறுவது ஏற்புடையதல்ல என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘டாக்ட்’ தொழில் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மின் இணைப்பில் 12 கிலோ வாட்டுக்குகீழ் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு 3(1) பிரிவிலும் 12 கிலோவாட்டுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு 3(பி) பிரிவிலும் மின் இணைப்பு வழங்க வேண்டும். தேவைப்படுவோருக்கு மாற்றியமைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்ட பின்னரும், மின் வாரிய அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர்.
கோவை வடக்கு, தெற்கு, மெட்ரோ, திருப்பூர், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட கோவை மண்டல மின்வாரிய அலுவலகத்தின்கீழ் மின் இணைப்பு மாற்ற வேண்டிய பிரிவில் 58 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. மின் வாரியம் நினைத்தால் மென் பொருளில்சிறிய மாற்றத்தை செய்தால் போதும். இதை விடுத்து ஒவ்வொருவரும் விண்ணப்பிக்க வேண்டும் என சில நடைமுறைகளை கூறுவது ஏற்புடையதல்ல.
நிலை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலை நீடித்தால் எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் எம்எஸ்எம்இ துறையில் பல நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: மின் கட்டண உயர்வுக்கு அதிமுக அரசு காரணம் என்றும் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுவது ஏற்புடையதல்ல.
கடந்த ஜூலை நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒரு யூனிட் ரூ.9.09, ஆந்திராவில் ரூ.8.62, தெலங்கானா ரூ.8.74, கர்நாடகா ரூ.8.37, குஜராத் ரூ.8.87, ராஜஸ்தான் ரூ.7.59, பஞ்சாப் ரூ.7.81 ஆக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் அதிகமாக உள்ளது. இதுகுறித்த விவரங்களை அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு நிலை கட்டணம் ரூ.35லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது. பத்து மாதத்தில் 2.1 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.153-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
மீண்டும் 8.23 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.160 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்றைய சூழலில் 112 கிலோ வாட் மின் இணைப்பு பெற்றவர்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் ரூ17,920 கட்டாயம் செலுத்த வேண்டும்.
அரசு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. மின் கட்டணம் தொடர்பாக வரி செலுத்தும் தொழில்முனைவோர் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் கவனத்தை ஈர்க்க எம்எஸ்எம்இ தொழில் முனைவோர் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருப்பினும் தற்போது வரை எந்த பயனும் இல்லை. அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்க்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறையினரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.